பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தரக்கூடிய செயல்களைச் செய்யற்க! என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார்.

வாழ்க்கைப் பிணைப்புகளைத் துறந்து அறம் பேணுதல் துறவறம். தமிழர் வாழ்வியலில் இல்லறமும் உண்டு; துறவறமும் உண்டு. இல்லறத்தில் நின்று வளர்ந்து துறவறத்தைச் சார்தல் தமிழர் மரபு. இல்லறஞ் சாராமலேயே துறத்தல் என்ற மரபும் இருந்து வருகிறது. இம்மரபு பெளத்த, சமண சமயங்களின் தொடர்பு தமிழகத்திற்குக் கிடைத்த பிறகு வந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது. தமிழரின் துறவற வாழ்க்கையைத் தொல்காப்பியம்,

‘காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’

(தொல். கற்பியல்-51)

என்று கூறி விளக்குகிறது. திருவள்ளுவரின் திருக்குறள் இயல் வைப்பும் இல்லறவியலை அடுத்துத் துறவறவியல் பேசப்படுவதாலும் இஃது உய்த்துணர முடிகிறது. புகழ் அதிகாரத்திற்குப் பின் துறவறவியல் தொடங்குகிறது. இல்லறவியலின் பயன் புகழ், புகழின் பயன் துறத்தல். தமிழர்தம் சமய நெறியில் வழிபடுந் தெய்வத்தை அம்மையப்பனாகக் கருதி வணங்குவதால் இல்லறத்தை வெறுத்த துறவு தமிழர்க்கு இல்லையென்பது துணிவு. இல்லறம் ஆசைகளுக்கு உட்பட்டது; துறவறம் ஆசைகளுக்கு அப்பாற்பட்டது என்பதும் முற்றான விளக்கமன்று. அறுபான் மும்மை நாயன்மார் வரலாற்றில் வரும் இல்லறத்தில் வாழ்ந்த சான்றோர்கள் துறவியரும் தொழும் சான்றோர்களாக, பற்றற்றவர்களாக விளங்கியதைக் காண்கின்றோம்.

தவம், இல்லறத்திற்கு இல்லையென்பது தமிழக வழக்கமன்று. "மேருவரையின் மேம்பட்ட தவத்தான்” என்று