பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதனால் மறவாது நினைந்து வாழும் திறன் வளரும். இங்ஙனம் வாழும் பெண் தன் கணவருக்கும் பெய்யென வேண்டும்போது பெய்து உறுதுணையாய் அமையும் மழை போல் துணையாயமைவள். (37)

கணவனை மனத்தால் தொழும் கடமையொடு கணவனை வாழ்த்தும் பெருமையையும் கொடுத் திருக்கிறார். இங்கு பெண்களைத் தாழ்த்துவது என எதுவும் இல்லை. இயற்கைக்கு எதிரான கூறுபாடு எதுவும் இல்லை.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்ற குறளில் ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்ற பகுதி பல வகைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. பகைமை காரணமாக உள்ளத்தில் மறம் நிகழ்ந்தும், அவன் மேல் அன்பு செய்யவும் அது நீங்கும். எனவே மறத்தை நீக்குதற்குத் துணை அன்பு என்பார் பரிமேலழகர். இதற்கு அடிகளார் கூறும்பொருள் ஆழ்ந்து எண்ணத்தக்கது.

....தீமைகளைக் கண்டும் பொறுத்துக் கொள்ளுதல் அன்பு அல்ல. பொறுத்துக் கொள்ளாது அறிவுறுத்தல், கண்டித்தல், தண்டித்தல் முதலிய அன்பிலாமை போலத் தோற்றமளிக்கும் மறச் செயல்களை மேற்கொள்ளுக. இத்தகு மறச்செயல்கள் நேரிடையான அன்பு இல்லை. ஆனால் விளைவு அன்பேயாம்”. (51)

பொதுவாகத் தீமையை ஒழிப்பதும் அன்பின் பட்டதேயாம். தனி மனிதரைக் கண்டித்து அல்லது தண்டித்துச் சமுதாயத்தைக் காப்பதும் அன்பே யாகும். ஜான் டூயி (John Dewey) என்ற அமெரிக்கத் தத்துவ அறிஞர், “நல்ல மனிதர்கள் என்பவர்கள் தீமையை எதிர்க்க வேண்டும்” என்பார். பாரத மாதாவைப் பற்றிப் பாட வந்த பாரதி,

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

என்கிறார். வேதம், வாள் இரண்டும் சமமாகவே அவற்றின் பயன் பொருத்து நல்ல கருவிகளாகின்றன. இக்குறளுக்கு அடிகளாரின் மேலே கூறப்பட்டுள்ள விளக்கம் எண்ணி, எண்ணி மகிழத்தக்கது.

சிறுமையுள் நீங்கியஇன் சொல் மறுமையும்
இன்மையும் இன்பந் தரும்

என்ற குறளுக்கு விளக்கம் கூற வந்த அடிகளார்,

நல்லதுக்குத் தானே சொல்கின்றேன் என்று ஏசக் கூடாது. திட்டக் கூடாது. பழி தூற்றக் கூடாது. (65)

என்று கூறுவது நம்மில் பலருக்கும் பயன்படும் அறிவுரை.

நமது சமுதாயத்தில் நாம் பல வகை நோன்புகளைக் கடைப்பிடிக்கிறோம். உண்ணா நோன்பு, பேசா நோன்பு (மெளன விரதம்) முதலியன நாம் காண்பவை. நோன்புகட்கு அடிகளார் ஓர் அடிப்படையான விளக்கம் தருகிறார்.