பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



1. தாம் கொல்லாது விலைக்கு வாங்கிய ஊனை உண்ணுதல் பாவமில்லை என்ற பெளத்த சமயக் கருத்தை மறுத்து மொழிந்தது இது.

ஊன் கொள்வார் இல்லையாயின் ஊனை விற்பாரும் இல்லை; கொலைஞரும் இல்லை என்பது கருத்து.

2. ஊனினை உண்ணும் பொழுதெல்லாம் கொலை நிகழ்வதை உன்னுக. ஊன் உண்ணும் ஆசை, பிறிதொரு மனிதனைக் கொலைஞனாக்குவதை உணர்க! அதனால் ஊன் உண்ணும் அவா தடைப்படும். ‘கொள்ளாது’ என்ற பாடவேறுபாடும் சிறப்பானதே.

‘உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.’

257

புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே என்ற உண்மையை உணர்ந்தால் ஊனை உண்ணா திருத்தல் வேண்டும்.

"புண் - நோய்வாய்ப்பட்டது; அருவருப்பானது என்று உணர்ந்தால் புலால் உண்ணும் ஆவல் அற்றுப் போகும் என்பது கருத்து.

1. ஊன் உணவு, பிறிதோருடம்பின் நோயுற்றபுண்; நோயினைத் தரும்புண் என்று உணர்க.

2. புலாலின் தீமைகளை அறிந்தால் போதாது. உணர்தல் வேண்டும்.

‘செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.’

258

மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவினை உடையவர் உயிர் நீங்கிய பிணத்தை உண்ணார்.

1. உயிர் நீங்கிய உடம்பு, பிணம் என்பதை அறிக; அதனை உண்ணற்க.