பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



157



2. ஊன் உண்டலால் கொலை முதலிய குற்றங்கள் வரும் என்பதை அறிந்து தெளிக.

3. ஊன் உண்ணும் ஆசையால் அறிவை இழக்கக் கட்டாது.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.’

259

தீயின்கண் நெய்முதலிய பொருள்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலினும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் உடம்பைத் தின்னாமை நன்றாம்.

வேள்விகளிலும் கொலை வேள்விகள் உண்டு. இத்தகு கொலை வேள்விகளைத் தவிர்த்திட வேண்டும் என்று கூறியது.

1. அருளின்மைக்குக் காரணமாகிய, கொலையைத் தவிர்த்திடாமல் வேள்வி முதலியன செய்தல் பயனற்றது என்றறிக.

‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.’

260

ஓருயிரையும் கொல்லாதவனாய், புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.

கொல்லாதவன் புலால் உண்பவனாக இருக்கலாம். புலால் உண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலாம் என்பதை உணர்த்தியது.

இன்று புலால் உண்பவர்களில் வாங்கி உண்பவரே மிகுதி. அதனால் இவர்கள் கொல்வதில்லை. இன்று புலால் உண்ணா மரபினைச் சார்ந்தவர்கள் துமுக்கியை (துப்பாக்கியை)க் கொலைக் கருவியைத் தாங்குவதைப் பார்க்கின்றோம்.