பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



159



1. உடலுக்கோ-உணர்வுக்கோ ஊறு, இயற்கையின் வழியோ அல்லது மற்றவர்கள் மூலமோ வந்தால் அதனைப் பொறுத்தாற்ற வேண்டும்.

2. ஊறு செய்தவர்களுக்குத் திரும்ப ஊறு செய்ய நினைக்கக் கூடாது.

‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.’ 262

தவம்-தவத்தையே உடைமையாகக் கொண்டவர்க்கேயாகும். தவத்தையே உடைமையாகக் கொள்ளாதவர்கள் பிற நோக்கத்திற்காகத் தவம் மேற்கொள்ளுதல் அவமாகும்.

1. தவம் செய்ய முனைவோர் தவத்தையே உடைமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

2. தவம் செய்வார் காதற்ற ஊசியும் உடைமையாகக் கொள்ளுதல் சாலாது.

3. துவரத் துறக்கும் முயற்சியின் முடிவிலேயே தவம் செய்யும் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.

‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.’ 263

யாதொரு பற்றுக் கோடுமின்றி முழுவதும் துறந்தவர்க்கு, உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாதனவாகிய உண்டி முதலியன வழங்குவதற்காகத் துறந்தாரல்லாத மற்றவர்கள் தவநெறியை மறந்தார்கள் போலும்.

1. தவம் செய்வார்க்கு இன்றியமையாதனவாகிய பொருள்களை வழங்குதல் தவம் உடையாரைத் தவத்தில் ஈடுபடுத்தியதாகும்.

2. தவம் மேற்கொள்ளாது வாழ்பவரின் கடமை, தவம் செய்வாரைப் பேணுதல்.