பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



167


காப்பாற்றினால், தகுதியறிந்து கடமையறிந்து இந்த இரண்டையும் அறிந்து நீ முறை செய்தால் உன்னை இறை என்று வைப்பர். ‘இறை என்று வைக்கப்படும்’ என்பது, என் தகப்பனார் மாதிரி கருதுகிறேன் என்றால், கருதுகிறாரே தவிர, தகப்பன் அல்ல என்பது தெரிகிறது.

“நீ கடவுள் போல” என்றால் கடவுள் அல்ல, ஆனால் கடவுள் போலக் கருதுகிறேன் என்று பொருள் ஆக, தெய்விக உரிமை என்று அரசுக்கு உரிமையிருந்த காலத்தில் ஒன்றே முக்கால் அடியிலே இந்த நாட்டிலே நல்ல கொடிகட்டி ஆண்ட பேரரசுகள் இருக்கின்ற பொழுதுகூட திருவள்ளுவர் புரட்சி செய்கிறார்.

இதே கருத்தைப் பிரெஞ்சுப் புரட்சி வருகின்றபொழுது, சொல்வதற்கு ரூஸோ பட்ட அல்லல் நமக்குத் தெரியும். அந்த நாடு அதை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு அல்லல்பட்டது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் எளிய புரட்சியாகத் திருவள்ளுவர்,

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.’

388

என்றார்.

இறை என்று சொன்னால் மட்டும் போதுமா? குடிகளை நன்றாகத் தழுவி ஆட்சி செய்ய வேண்டும்.

புறநானூற்றுக் கவிஞன் இவருக்கு அடி எடுத்துக் கொடுக்கிறான். புறநானூற்றுக் கவிஞன் அரசனைப் பார்த்துச் சொல்லுகிறான்; ‘நீ நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றவேண்டும், தெரியுமா? ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பாற்றுவதுபோல் காப்பாற்ற வேண்டும்.”

நம்முடைய நாட்டிலே உயர்ந்த அன்பிற்குச் சொல்லுவதெல்லாம் தாயன்பைத்தான்.