பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கொடுக்க வேண்டும். அதைத்தான் வள்ளுவர், நிலத்திற்கு வளம் இட வேண்டும் என்கிறார். பின்னால் எரு இடுதல் என்றே சொல்லுகிறார்.

ஆழ உழ வேண்டும்; அகல உழுவதைவிட எரு இடுதல் சிறந்தது என்று கூறுகின்றார் திருவள்ளுவர். எரு இடுதல், புழுதிகூட எப்படி உழ வேண்டும், எப்படிப்பட்ட புழுதி இருக்கவேண்டும், என்றும் சொல்லுகிறார்.

எனவே, வேளாண்மைத் துறைக்கு ஒரு சிறந்த பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அது அதனுடைய கடமைகளிலே மிகச் சிறந்தது என்றே சொன்னார். அதற்குப் பயிர் பச்சைகளையெல்லாம் காப்பாற்றவேண்டும் என்று சொன்னார்.

சரி, அப்பொழுது நான் வரியே இல்லை என்று சொன்னேனே, வரியில்லாமல் அரசு எப்படி நடந்தது? அரசுக்கு வரி எப்படி வந்தது? ஆனால், இப்போது எல்லாரும், எல்லா இடங்களிலும், பல வாசற்படிகளில் வரி கொடுக்கிறோம். ஒரு வாசற்படியிலே, ஒரு ஆளிடம் மட்டுமல்ல, பல இடங்களிலே-பல கட்டடங்களிலே, பல வடிவங்களிலே-பல பெயர்களிலே வரி கொடுக்கிறோம்.

சிலர் நாம் வரி கொடுக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் இன்னொருவர் மூலமாகக் கொடுக்கிறோம். இதெல்லாம் இப்பொழுது முதலாளித்துவத்தின் அரசில். அரசு வேறு; மக்கள் வேறு என்கிற இடத்தில் இருக்கின்ற வரி அமைப்பு முறைகள்.

ஆனால் திருவள்ளுவருடைய அரசு அமைப்பு முறையிலே ஆளப்படுகிறவர்களும், ஆளுகின்றவர்களும் நெருங்கிய உறவினர்கள். அங்கே, ஒருவனை ஒருவன் ஏமாற்ற வேண்டும் என்றோ, நல்லது கெட்டதைச் சொல்லிச் செய்ய வேண்டுமென்றோ அவசியமில்லை. -