பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்கத்திற்கும் பயனுண்டு. வாழ்க்கைப் போராட்டங்களில்தான் நற்பண்பு தங்கி இருக்கிறது. வெற்றியிலல்ல என்னும் அனுபவ உரை எண்ணி இன்புறத்தக்கது (242)

என்பது அடிகளார் பிரகடனம். அடிகளார் வள்ளுவரின்

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

என்ற குறளை ஓர் இடத்திற்கும் மேலாகக் கையாளுகிறார். இக்குறளுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர்:

தம் மக்களதறிவுடைமை, பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட் கெல்லாம் தம்மினுமினிதாம்

என்கிறார். அடிகளார் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. ‘தம்மை விடத் தமது மக்கள் அறிவுடையராயிருத்தல் உலக மக்கட் கெல்லாம் இனிமை பயப்பது’ என்றே பொருள் கொள்கிறார். பலரும் இவ்வாறே பொருள் கொண்டுள்ளனர். ஆனால் அடிகளார் இக்குறளில், உலகில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மாற்றத்தின், அந்த மாற்றத்தின் அடிப்படையாக உள்ள பரிணாம வளர்ச்சியின் வித்து வள்ளுவர் சிந்தனையில் இடம் பெற்று இருப்பதாகக் காண்கிறார்.

மேலும் அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. அஃது நிலைபெற்ற தன்மையுடைய தல்ல. இன்றைய அறிவு, நேற்றைய அறிவை விட வளர்ச்சி யுடையதாக இருக்க வேண்டும். இன்றைய அறிவை விட நாளைய அறிவு வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். இது உலக நியதி. (245)

என்கிறார். மேலும்,

(i) மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் அறிவு இன்றியமையாதது. (ii) அறிவு உலகியலில் யதார்த்த நடப்புக்கு ஒத்திருக்க வேண்டும். (iii) அறிவு. வளர்ச்சி அடையக் கூடியது

என்னும் மூன்று கருத்துகளும் சோஷலிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள். அக்கருத்தினையே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் குறள்பா வடிவில் எடுத்துக் காட்டியுள்ளதை எண்ணுகிறபொழுது பெருமித உணர்ச்சி மேலிடுகிறது. (245)

என்கிறார். இத்துடன் நில்லாது,

உலகம் என்றால் உயர்ந்தோர் நிகழ்கால அறிவை விடச் சென்ற கால அறிவு சிறந்தது என்பது போன்ற கருத்துகளே பரவி வருகின்றன. அதனாலேயே தமிழினம் வளர்ந்து, வீழ்ந்து இருக்கிறது. (246)

எனக் கூறி, கண்ணை மூடிக் கொண்டு பழமை பாராட்டுவோரை இடித்துரைக்கிறார் (245, 246). அடிகளார், செயலை மதிப்பவர்; செயலை ஊக்குவிப்பவர். இந்நூல் முழுவதிலும் ஆங்காங்கு செயலின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பேசுகிறார். ஓர் இடத்தில் முத்தாய்ப்பு வைத்தது போல,

அறிவு ஆற்றல் இவை பெருகி வளரும் வாயில் செயற் படுதலே யாம் (259)