பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எல்லாம் அரசுக்குச் சொந்தமாக இருந்தால் தேவையானவர்கள், தகுதியானவர்கள், உழைப்பாளிகள் எடுத்துப் பயன் படுத்துவார்கள். அது நாட்டிலே செல்வச் செழிப்புக்குத் துணை செய்யும்.

தனி மனிதனுக்கு உடைமைகள் இருப்பதினாலே அதிலே பற்றுகளும், பாசங்களும் பெருகி, காலப் போக்கிலே அவன் ஒழுக்கக்கேடு உடையவனாகப் போய்விடுகிறான்.

ஆகவே திருவள்ளுவர், “உள்ளம் உடைமை உடைமை, ஊக்கமுடைமை உடைமை” என்று சொன்னார். இது ஆய்வுக்கு உரியது. நிலம் அரசுக்குச் சொந்தமாக இருந்திருக்கிறது. இது வள்ளுவருடைய அரசுக்குரிய பொருளியல் அமைப்பிலே நாம் காணுகின்ற சிறந்த சாட்சி.

அரசு தவறு செய்கிறது அல்லது மக்கள் தவறு செய்கிறார்கள் என்றால் திருவள்ளுவருடைய ஆராய்ச்சியே தனிப் போக்கு.

நம்முடைய நாட்டிலே பழங்காலந்தொட்டு இயற்கை கெட்டால், விரிசுடர் வீழ்ந்தால், மழை பொய்த்தால் அரசைத்தான் குறை சொல்லுவார்கள். அரசு ஒழுக்க நம்பிக்கையாக இல்லையென்றால் மழை பெய்யாது; கற்பு முதற்கொண்டு இருக்காது; அறம் இருக்காது. ஆக, அரசின் பேரில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

காரணம், எல்லா விதமான அதிகாரங்களும் அரசுக்கு இருக்கின்றன அல்லவா?

தனி மனிதன் முயன்று முயன்று செய்தாலும் சிறு தவறுகள் பண்ணுவானே தவிர பெரிய தவறுகள் செய்து நாட்டினுடைய வரலாற்றைக் கெடுத்துவிட முடியாது.

அரசு என்பது எல்லா விதமான அதிகாரங்களும் குவிந்திருக்கின்ற இடமானமையின் காரணமாகத் தவறு பெரிதாகப் படுகிறது.