பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சில நாட்களுக்கு முன்பு புயல் வந்தது. இருந்ததோ ஒரு சிறு குடிசை. குடிசையும் காற்றில் போய்விட்டது. கட்டியிருந்த மனை இன்னொருவருக்குச் சொந்தம். புயலிலே நட்டமானவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு அதிகாரிகள் வருகிறார்கள். கடன் கொடுக்க விரும்புகிறார்கள். அரசு சட்டப்படி, ‘உனக்குச் சொத்து இருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள். அவன் ‘அந்தக் குடிசைதான் எனக்குச் சொத்து. அதுவும் காற்றில் போய்விட்டது. மனை எனக்குச் சொந்தமில்லை’ என்று சொல்ல, அதிகாரி, ‘உனக்குக் கடன் கொடுக்க இயலாது’ என்று சொல்கிறார். இது எப்படி உத்தரவாதமுள்ள அரசாக இருக்க முடியும்?

21 வயது ஆகிவிட்டால், இல்லை, இந்த நாட்டிலே-இந்த மண்ணிலே பிறந்துவிட்டானானால், அவனுக்குரிய வாழ்க்கையை வேறு எதை வைத்தும் கொடுக்காமல் இந்த நாட்டுக் குடிமகன் என்கிற அமைப்பில் கொடுக்கிற-வழங்குகிற அரசுதான் உத்தரவாதமுள்ள அரசு.

அரசு குடிமகனுக்குக் கடன் கொடுத்தால், அதை எப்படி வசூலிப்பது? வசூலிப்பதற்கு நிறைய வழிகள் உண்டு. நெடுஞ்சாலைத் துறை இருக்கிறது. பொதுப்பணித்துறை இருக்கிறது. நான் உழைப்புச் சக்தி உடையவன் என்று சொன்னால் அரசாங்கம் பதிவு செய்துகொள்கிறது. ‘இன்ன மாவட்டத்திலே-இன்ன தாலூகாவிலே-நீ உன்னுடைய உழைப்பால் ஆகிய வேலையைச் செய்; பாதி ஊதியத்தை வாங்கிக்கொள்; பாதியைக் கடனுக்கு அடை’ என்றால், அடைத்துவிட்டுப் போய்விடுகிறான். அவனுக்குச் சொத்து இருந்தால்தான் கடன் தருவேன் என்றால், சொத்து இருக்கிறவன்தான் கடன் வாங்கிக்கொண்டிருப்பான். சொத்து இல்லாதவன் என்றைக்கும் கடன் வாங்க முடியாது. அவன் முன்னுக்கு வர வாய்ப்பே இல்லை. நான் கடன் வாங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு இதனைச் சொல்லவில்லை. கடன் வாங்குவது என்பது இப்பொழுது நாகரிகம்.