பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்தால் நான் உன்னை இப்படி அடிப்பேனா? நீ நல்ல பிள்ளை” என்று சொன்னாராம் சிவபெருமான்.

அப்பரடிகளுக்கும், பெருமானுக்கும் இருந்த உறவைப் பார்க்கிறோம்.

‘புளியம் விளாரினால் மோதுவிப்பாய்
பின்னை உகப்பாய் கச்சிஏகம்பனே!’

என்று பாடுகிறார் அப்பரடிகள்.

அதே போல இங்கே நமது வள்ளுவர்,

"கடிதோச்சி மெல்ல எறிக"

என்கிறார். ஆட்சியைப் பார்த்துப் பயம் இருக்க வேண்டும். ஆட்சியினிடம் ஓர் அச்சம் இருக்கவேண்டும். ஆனால் அது பேயைக் கண்டு அச்சப்படுவது போல் அமைந்துவிடக் கூடாது. ஆக, கடிதோச்ச வேண்டும். மெல்ல எறிய வேண்டும்.

இதைவிட அரசுக்கு, அரசனுக்கு என்ன புத்தி சொல்ல முடியும்? நம்முடைய நாட்டிலே கடிதோச்சியவர்கள், மெல்ல எறிந்தவர்கள், ஏராளமானவர்களை வரலாற்றிலே பார்க்கிறோம்.

கடிதோச்சி தன் அரசையே இழந்து ஊரைவிட்டு ஓடியிருக்கின்ற நிலையையும் பெரும்பாலும் நம்முடைய நாட்டிலே, மூவேந்தர்களது ஆட்சியிலே காணலாம். பெருமைக்குரிய செய்தி, குடிகளால் அரசு துறந்துபோன மன்னர்களே கிடையாது.

நீ இந்த ஆட்சிக்குத் தகுதியில்லாதவன் என்று எந்த மன்னனையும், மக்கள் அரசிலிருந்து விரட்டியதே கிடையாது.

பிரான்ஸ் தேசத்து சரித்திரத்திலேயே ஏராளமான அரசர்கள், சில சமயங்களில் நாயைவிட மிகக் கேவலமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.