பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார். அப்படி ஒருவன் இருந்தான். மெய்ப்பொருள் நாயனார் என்ற ஒரு சான்றோரிடத்துப் பகை கொண்டான். அந்தப் பகையை முடிப்பதற்காக நல்ல சிவனடியார் போலக் கோலம் கொண்டான். கோலம் கொண்டு, ஆகம ஏடு வைத்திருப்பதாகச் சொல்லி வந்து, பாடம் சொல்லப் போவதாகச் சொன்னான். அந்தப்புரத்திலே இருந்த மெய்ப்பொருள் நாயனார் தன்னுடன் இருந்த அரசியை வெளியே அனுப்பிவிட்டு, அவர் பணிவோடு அன்போடு பாடம் கேட்பதற்காகக் குனிகிறார்.

‘தான் நினைத்த அப்பரிசே செய்ய’

என்கிறார் சேக்கிழார். ‘குத்தி விட்டான்’ என்று சேக்கிழார் சொல்லப் பயப்படுகிறார். அவ்வளவு கொடுமை செய்தவனை வெட்ட வரும் தத்தனைப் பார்த்து மெய்ப் பொருளார் தாம் கீழே விழுகிற பொழுது, ‘தத்தா நமர்’ என்கிறார். அங்கே பொறுத்தாற்றுகின்ற பண்பு பாராட்டப் பெறுகிறது. ஆனால், சண்டேசுவர நாயனார் புராணத்தில் தன்னை ஈன்ற தந்தையின் காலையே தடிந்து, கோடரியால் வெட்டுகிறார். அங்கு வெகுளியைச் சேக்கிழார் வாழ்த்துகிறார். ஓர் இடத்தில் பொறையுடைமையை வாழ்த்துவானேன்? ஓர் இடத்தில் வெகுளியை வாழ்த்துவானேன்? என்று சொன்னால், மெய்ப்பொருளாருக்கு வந்தது அவரைப் பற்றிய சொந்த, தன் சார்பான கேடு. எனவே, தற்சார்பாக வருகின்ற கேடுகளையெல்லாம் மனிதன் தாங்கிக் கொள்ள வேண்டும்; பொறுத்தாற்ற வேண்டும். ஆனால், சண்டேசுவர நாயனார் வரலாற்றில் வருகின்ற கேடு, பரம்பரையாக வருகின்ற ஓர் இனத்தினுடைய பண்பாட்டு நாகரிகத்தைக் கெடுக்கின்ற கேடு. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டுக்கென்று பயன்படுகிற மூர்த்தியை, அந்த வழிபாட்டுச் சடங்கை, அந்த வழிபாட்டு முறைகளை அலட்சியப்படுத்தியதனாலே கோபம் வருகிறது.