பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



219



இப்பொழுது நம்முடைய நிலை அப்படி இல்லை. தலை கீழாக மாறி இருக்கிறோம். இப்பொழுது யாராவது நம்மைத் திட்டினால், நமக்குக் கோபம் வந்துவிடும். நம்முடைய மொழியை, நம்முடைய மதத்தை, நம்முடைய சமூகத்தை, யாராவது பேசினால் கோபம் வராது; ‘அதெல்லாம் கடவுள் இருக்கிறார் பார்த்துக் கொள்வார்’ என்று சொல்லி விடுவோம். பழங்காலத் தமிழ் மக்கள் தங்களைவிடத் தங்களுடைய கலை, மொழி, நாகரிகம், சமயம் இவைகளை முன்னிலைப்படுத்தித் தாங்கள் பின்னே நின்று கொண்டார்கள். இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னே நின்று கொண்டு, நம்முடைய மொழி, கலை, சமயம், நாகரிகம், பண்பாட்டைப் பின்னே வைக்கிறோம். தெளிவாகச் சொன்னால், நமக்குத்தான் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறோமே தவிர, அவைகளுக்காக நாம் இல்லை. இந்தப் போக்கை அந்தச் சண்டேசுவர நாயனார் வரலாற்றில் பார்க்கலாம். எனவே,

‘மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.’

278

என்று சொல்வதைப் போல, காரியங்கள் செய்வது மட்டும் முக்கியமல்ல. காரியங்கள் செய்வதற்குரிய நோக்கம் என்ன என்பதே முக்கியம். எந்தக் கோலம் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம்முடைய மனம் எங்கே தங்கியிருக்கிறது என்பது முக்கியம்.

‘எக்கோலம் கொண்டால் என்ன?
ஏதவத்தைப் பட்டால் என்ன?
முத்தர் மனமிருக்கும் மோனத்தே’

என்று சொன்னார்கள். நீ இருப்பது உப்பரிகையாக இருக்கலாம். நீ இருப்பது கோயிலாக இருக்கலாம். ஆனால் உன்னுடைய மனம் கோயிலில் இருக்கிறதா? உப்பரிகையில் இருக்கிறதா? அல்லது குப்பை மேட்டில் இருக்கிறதா என்று