பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



221


மக்களாகச் சொல்லுகின்ற பெயரே தவிர, அங்கு இராஜராஜன் கட்டினான் என்று ஒரு கல்வெட்டு இல்லை. அவன் காலத்திலேயே அவன் தனக்கு ஒரு சிலை வேண்டுமென்றால், அவன் வைத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் தங்களையா முன்னிருத்திக் கொண்டார்கள். இல்லை! அவர்கள் தங்களைப் பின்னிருத்திக் கொண்டார்கள். கலைகளை முன்னே வைத்தார்கள்; கோயில்களை முன்னே வைத்தார்கள்.

அதனால்தான், நான் நகரத்தார் கோயிலிலே பேசுகிறபொழுது சொன்னேன், ‘தன்னுடைய தலையைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, காளையார்கோவில், கோவிலைக் காப்பாற்றுவது பெரிது’ என்று மருது சகோதரர்கள் நினைத்தார்கள். ஆக, தான் வாழ்வதைவிட, தன்னுடைய நாடும், தன்னுடைய மொழியும், தன்னுடைய கலையும், தன்னுடைய நாகரிகமும் வாழ்வது பெரிது என்று நினைத்தார்கள். எனவே, ‘இருள் சேர் இருவினையும் சேரா’ என்று சொன்னால் இந்த உயிர்களை இரண்டு வினைகளும் வந்த சேரக் கூடாது. சேரக் கூடாது என்று சொன்னால், இரண்டு வினைகளாலும் இருக்கின்ற பயன் வந்து சேரக் கூடாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், மனிதன் என்றைக்கும் தன்னுடைய கணக்கை நேராக முடித்து, பற்று வரவைக் குறைத்து, இறுதியில் அவன் என்றைக்கும் கணக்கை நேராக ஒத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தக் கணக்கு நேராக ஒத்துப் போகாது போனால், அதனால் வருகிற விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டிவரும். ஆக, ‘இருள் சேர் இருவினையாக இருப்பதால்’ சரியாகச் செயல்களைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவை நமக்கு இன்பத்தை, துன்பத்தைத் தருவதாக வரக்கூடாது. இன்னொன்றை மறந்து விடக்கூடாது. இன்பமாக இருந்தாலும் மருந்துதான்; துன்பமாக இருந்தாலும் மருந்துதான். இந்த அடிப்படை உணர்வு நமக்கு வராது போனால், நம் வாழ்க்கையில் வெற்றி