பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



223


என்கிறார். ‘நீடு வாழ்வார்’ என்பதற்கு இந்த நிலவுலகத்திலே நீண்ட நாள் வாழவேண்டும். மீண்டும் கொஞ்சம் வலியுறுத்துகிறேன். நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் என்று சராசரி வயதாக இப்போது வரையறை செய்கிறார்கள். மனிதர்கள் நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் வாழ வேண்டும். அதற்கு ஒரு நாள் குறைந்தால் கூட ஏதோ பெரிய இழப்பு என்று நாம் கருதவேண்டும், கடவுள் நமக்குக் கொடுத்ததில் ஒன்றைக் குறையச் செய்து விட்டோம் என்று. அப்படி வாழ வேண்டும் என்று சொன்னால் ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ - நம்முடைய ஐம்பொறிகள் இருக்கின்றனவே, இவை பற்றி அன்றைக்கே குறிப்பில் சொன்னேன்; இவைகளெல்லாம் வரத்து மடைகளே தவிர, போக்கு மடைகள் அல்ல. நம்முடைய உடலில் தங்கியிருக்கிற உயிரையும், உடம்பினுடைய ஆற்றலையும், வளர்த்துப் பெருக்கக் கூடிய வாயில்கள்தான் நம்முடைய கண்ணும் காதும் போன்ற கருவிகள். இவைகள் நம்முடைய பலத்தை வளர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கருவிகளே தவிர, இவைகள் நம்முடைய பலத்தைக் குறைக்கக் கூடியன அல்ல. இன்றைக்கு நம்முடைய கொச்சைத் தனமான வாழ்க்கையின் மூலமாக, கொச்சைத்தனமான திரைப்படங்கள், கொச்சைத்தனமான தகவல்கள், கொச்சைத்தனமான செய்திகள், எழுச்சி வசப்பட்ட செயல்கள், உணர்ச்சி வசப்பட்ட செயல்கள் இவைகளாலே இந்தப் பொறிகளெல்லாம் கிட்டத்தட்ட போக்கு மடைகளாகவே இருக்கின்றன.

நான் தினந்தோறும் எவ்வளவு ஈட்டிக் கொண்டேன் என்பதைவிட, நான் எவ்வளவு செலவழித்தேன் என்று சொல்வதைப் போலத்தான் நம்முடைய வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. எனவேதான் ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்கிறார். ‘அவித்தான்’ என்று சொன்னால் மீண்டும் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் ‘அழித்தல்’ என்ற சொல் பொருள் அல்ல. நிரம்பப் பேர் ‘அழித்தல்’ அல்லது