பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவர்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சை! இப்படி வாழ்கின்ற மனப் போக்கு உடையவர்கள் இருக்கிறார்கள். ஆதலாலே ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்று சொன்னால் நான் அன்று சொன்னதைப்போல நல்ல வீணை ஒன்றை அவன் நன்கு வாசித்தால் அவனுக்கும் மகிழ்ச்சி. வீணைக்கும் பெருமை. கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி. அதேபோல ஒருவன் வள்ளுவர் வழியில், நம்முடைய சமயநெறியில் வாழ்ந்தால் அவனுக்கும் பெருமை; அவனுடைய வீட்டுக்கும் பெருமை; அவனுடைய நாட்டுக்கும் பெருமை. சுற்றத்தார்கள் எல்லாம் மகிழ்வார்கள். சுற்றமாக உலகம் அவனைச் சுற்றும். சில பேர் ‘என்னை யாருமே அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார்கள்; ஆதரிக்க மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் இவர்களுக்கு என்று இவர்கள் சில குணப்போக்குகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்’

6

என்று சொன்னார் திருவள்ளுவர். இதற்கு ஏதாவது பயிற்சி வேண்டுமே. இறைவனின் துணை நமக்கு வேண்டுமே. இந்த இறைவனை எங்கே தேடுவது? அவர் சொல்கிறார், ‘நீ கூப்பிடு, கூடவே வந்து விடுவார்’ என்று இவன் கூப்பிடுவது இல்லை.

‘பன்னாள் அரன்தன்னை அர்ச்சிக்க
மெய்ஞ்ஞானம் கூடும்
பன்னாள் இவன்அழைத்தால் அழைப்
பொழியான்என்று எதிர்ப்படும்’

என்றார், தேவார ஆசிரியர். பன்னாள் அழைக்க வேண்டு மென்று சொன்னார்கள். ஆனால் திருவள்ளுவர் சொல்லுகிறார், ‘நினைத்தவுடனே உன்னுடைய மனத் தாமரையில் வந்து குடிபுகுந்து விடுவார்’ என்று.