பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



227



‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.’

3

என்றார். ‘மலர்மிசை ஏகினான்’ என்றார். ‘ஏகினான் என்றே சொன்னார். நினைத்தது முந்தியா, அவன் மனதில் வந்து குடி புகுந்தது முந்தியா என்று கேட்டால், நினைப்பதைவிட முந்தியே வந்து குடிபுகுந்து விடுகிறான் என்று சொன்னார். அவ்வளவு விரைவாக, யார் கூப்பிடுவார்கள் என்று இறைவன் காத்துக் கொண்டிருப்பான் போலத் தெரிகிறது. இவன் கூப்பிடுவதுதான் அவனுக்குத் தேவை. ‘மலர்மிசை ஏகினான்’ என்று கூறுகிறார்.

பரிமேலழகர் பல இடங்களில் நல்ல உரை எழுதவில்லை என்ற குறை இருந்தாலும், சில இடங்களில் அவருடைய உரைக்கு மிகப் பெருமை உண்டு. இந்த உரை மிகவும் பொருத்தமானது. ‘யார், யார் எந்த வடிவத்தோடு நினைக்கிறார்களோ, அந்தந்த வடிவத்திலேயே வந்து சேருகிறான்’ என்றார் பரிமேலழகர். இப்பொழுது நம்முடைய நாட்டில் ஒரே சாமிக்கு இவ்வளவு திருவுருவம் வந்தது இப்படித்தான். கடவுள் ஒருவர் தான்; கருத்து வேற்றுமை இல்லை. விநாயகர் ஒரு கடவுள்; அம்மை ஒரு கடவுள்; சிவன் ஒரு கடவுள்; திருமால் ஒரு கடவுள்; எல்லாம் ஒன்றுதான். யார் யார் எப்படி நினைத்தார்களோ, அவரவர்கள் நினைத்த வடிவத்தில் இறைவன் வந்து சேர்ந்து விட்டான். ஆக, அவரவர்கள் எந்த வடிவத்தை நினைத்தார்களோ, அந்த வடிவத்தைக் கொடுத்து விட்டார்கள். ஆக, கடவுள் ஒருவர்தான். அதில் யாரும் இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, பத்து என்று நினைக்காதீர்கள். ஆனால் நமக்கு மட்டும் ஏனோ அந்தப்பேத உணர்ச்சி போகவில்லை. இந்தச் சாமியைக் கும்பிடாமல் அந்தச் சாமியைக் கும்பிட்டால், ஏதாவது குறை வந்துவிடுமோ என்று பயப்படுகிறோம். பயப்படவே பயப்படாதீர்கள். எந்தச் சாமியைக்