பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’

1

என்பதிலே கூட அழகான சுவையான ஒரு கற்பனை இருக்கிறது. இந்த ‘அ’ என்கிற வரிவடிவத்தைப் பாருங்கள். வரிவடிவம், மேலே ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும். பழைய காலத்து ‘அ’ வில் கொஞ்சம் தொந்தி தொப்பையெல்லாம் விழுந்திருந்தது. இப்பொழுது சிறிது இளைத்திருப்பது போல் தெரிகிறது. அது என்ன காரணம் என்று தெரியவில்லை. பழைய காலத்து ‘அ’ வில் கீழே வந்து தொந்தி விழுந்து பின் மேலே போய் நேர்கோட்டில் சென்று முடியும். ‘அ’ என்ற வரிவடிவத்தில் மேலே இருக்கின்ற புள்ளி இறைவன். அவன்தான் பரிபூரணன். உயர்புள்ளியாக இருக்கிறான். அவன் உயிர்களை ஆட்கொண்டு அருள் வழங்க வேண்டும் என்பதற்காக இறங்கி வருகிறான். இறங்கி வரும் பொழுது மனிதன் அவன் முன்னால் நிற்கிறான். அவன் தனியனாய்த் தருக்கித் தலையால் நிற்கிறான். அவன் கடவுளை மதிக்க மாட்டேன் என்கிறான். என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். கடவுள் அவன் பின்னால் கெஞ்சிக் கொண்டே வருகிறார்.

இவன் முன்னால் போகிறான்; பின்னாலேயே வருகிறார். அது தொந்தி விழுந்த பகுதி. மனிதன் முன்னேயும் கடவுள் பின்னேயும் வந்த பகுதி. இவன் கொஞ்ச தூரம் போய் அடிபட்டு, உதைபட்டு சங்கடப்பட்டுத் தொல்லை பட்ட பிறகு, இவன் ‘இந்த ஆள் என்னதால் சொன்னாலும் விட மாட்டேன் என்கிறாரே, இவர் என்னதான் சொல்கிறார், என்று கேட்போமே’ என்று திருப்பிப் பார்க்கிறான். அவர் ‘நீ வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். நான் முன்னால் போகிறேன். நீ பின்னால் வா! சரியாகப் போய்விடும்’ என்கிறார். அதுதான் இந்த ‘அ’ வந்து கீழே இருந்து மேலே ஏறுகிற இடம். மேலே ஏறிய உடனே கடவுள் முன்னால்