பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள்தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மனம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். "தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். ‘உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை இருந்தது. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்காக உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தலைஈந்த குமணவள்ளலும் போன்ற அருளரசர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை! நலம் செய்யாத அரசுகள் சில வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கிழைக்கும் அரசுகளை நோக்கித்தான் புரட்சிகள் தோன்றும். இடையிடையே இருள் கவிந்தாலும் வள்ளுவர் வழித்தோன்றியவர்கள் இலக்கிய மாணவர்களாகவே அமைந்துவிட்டோம்! பரிமேலழகர் காலம் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை பாட்டுக்குப் பொருள்வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்துவிட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம்! திருவள்ளுவரை வழிபாட்டுக்குரிய பொருளாக மாற்றிவிட்டோம்!” என்று