பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ளார். அர்த்த சாஸ்திரத்தை ஆக்கித் தந்த கெளடல்யருக்கும் திருவள்ளுவர் முற்பட்டவர் என்பது வரலாற்றுண்மை.

திருக்குறள் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், அரசு ஆகிய படிமுறை வளர்ச்சிகள் வளர்ந்திருந்த காலத்திலே தோன்றிற்று. மனித சமுதாய அமைப்பில் மேற்கூறிய படிகளைப்பற்றித் திருக்குறள் தனித்தனியே ஆய்வு செய்து விளக்குகிறது. சமுதாயத்தின் தொடக்கத்தில் தோன்றிய நூலன்று. எனினும், சமுதாய அமைப்பில் பல்வேறு படிகள் தோன்றியிருந்தாலும், அந்தப் படிவளர்ச்சிகள் நிறைவு பெறாமலும், பூரணத்துவம் அடையாமலும் அவல நிலையிலிருந்த பொழுது திருக்குறள் தோன்றிற்று. திருக்குறள், முறையாக சமுதாயத்தின் பல்வேறு படிகளின் வளர்ச்சி முறைகளைப் பற்றியும், அவை அமையவேண்டிய இயல்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்குகின்றது. தனிமனிதன், குடும்பம், சமுதாயம், அரசு எனும் முறைவைப்பைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளுகிறது. சமுதாயத்தின் மேற்கூறிய அமைப்புகளுக்குள் இருக்க வேண்டிய உறவு முறைகளைத் திருவள்ளுவர் வரையறுத்துக் காட்டுகிறார். அறத்துப் பாலில் தனிமனிதனின் வாழ்க்கைக் கடமைகளை வற்புறுத்திக் கூறுவதோடு, தனிமனிதன் சமுதாயத்தோடு உறவு கொண்டு வாழ்வதற்கு இன்றியமையாத நல்லியல்புகளையும் எடுத்துணர்த்துகிறார். பொருட்பாலில் அரசு, குடி மக்கள் இயல்பு ஆகியவைகளை விரிவாக விளக்குகிறார்.

திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம். இலக்கியத்திலும் சிறந்த அறநூல்; அரசியல் நூலும் கூட. கற்பனைக் காட்டுக்குள் கருத்துக்கள் ஒளிந்து போகாமல் கண்ணாடியின் முன் உருவமென அவை வெள்ளிடை மலையென விளங்கும் வண்ணம் அமைக்கப்பெற்ற நூல். குறைகளைக் காட்டுகின்றார்; ஆனால், அப்பட்ட நிர்வாணமாக அல்ல. குறைகளைக் காட்டும் முயற்சியைவிட நிறைவைக் காட்டும் முயற்சியே திருக்குறளில் மேம்பட்டுள்ளது. திருக்குறள் ஒரு