பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறும் சிறப்புகள் சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தி அமைவனவாகும். தனிமனிதன் கெட்டால் நாடு கெடும். ஆதலால், சமுதாயத்தின் அடித்தளமாக அமைந்துள்ள தனிமனிதனை வளர்க்கும் அரிய முயற்சியில் திருவள்ளுவர் ஈடுபடுகின்றார். முதற்பாலாக விளங்கும் அறத்துப் பால் முழுவதிலும் தனிமனித வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றார். ஏன்? பாயிரத்திலே தனிமனிதனை உருவாக்கும் முயற்சியில் திருவள்ளுவர் ஈடுபடுகின்றார்.

காலம் மனிதனின் சிறந்த கருவி. அதை உணர்ந்து பயன்படுத்துகிறவன் வளர்கிறான்; முன்னேறுகிறான். மனிதன் பெறக்கூடிய அறிவு, செல்வம், புகழ் ஆகிய பேறுகள் அனைத்தையும் காலம் என்ற கருவியின் மூலமே மனிதன் அடைகின்றான். ஆதலால் காலத்தே செய்ய வேண்டுமென்பது வள்ளுவ நெறி. செல்வத்தை இழந்தால் திரும்ப சட்டலாம். இழந்த புகழையும் கூட திரும்பப் பெறலாம். ஆயினும், இழந்த காலத்தைத் திரும்ப அடைதல் - அல்லது பெறுதல் சாத்தியமில்லை. காலம் விலை மதிப்பற்றது. அதனாலன்றோ ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று அப்பரடிகள் கூறியுள்ளார். ஒரு சோஷலிச சமுதாயத்தினுடைய அமைப்பின் அடித்தளம் உழைப்பேயாகும். உழைப்பு உருப்பெறுவது காலம் என்னும் அடிப்படையிலேயே. அதனால் தான் திருவள்ளுவர்,

‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்’

38

என்கிறார்.

காலத்தை ‘வீழ்நாள்’ என்று குறிப்பிடுவது அறிவியலின் பாற்பட்ட கருத்து. மனிதன் வேறு எதை நிறுத்தினாலும் நிறுத்தி வைக்க முடியும். ஆனால் காலத்தை வராமலோ போகாமலோ நிறுத்தி வைக்க முடியாது. இயல்பாக நம்முன் வேலைக்கென்று-கடமைகளுக்கென்று வீழ்கின்ற நாட்கள்