பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு



247


என்று பொருள்படும். பிறிதொரு வழியிலும் பொருள் கொள்ளலாம். நன்றாற்றின் நாள் வீழாமல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

அதாவது, கடமைகளைச் செய்வதற்காக நம்முன் நாள் என்ற பெயரோடு வந்த காலத்தை வீணாக்காமல் பயன்படுத்தி நல்லன செய்தால் வையக வாழ்வு இன்பமாக அமையும். வையக வாழ்வு இன்பமாக அமையப் பெற்றால் இன்பங் கருதிச் செய்யப்படுகின்ற தீவினைகள் இல்லாமற் போகும். கொலை, களவு, பொய் போன்ற குறைகளில் இருந்து விடுதலை பெறலாம். இந்த விடுதலை கிடைக்கப் பெற்றபின் பிறப்பினின்றும் விடுதலை கிடைக்கும். அதன் காரணமாக மீண்டும் பிறத்தல் தடைப்படும். இதுவே சிறந்த சமயநெறி சமயக் கருத்து. இக்கருத்தையே திருவள்ளுவர் ‘வாழ்நாள் வழியடைக்கும் கல்’ என்று குறிப்பிடுகின்றார். ஈண்டு திருவள்ளுவர் கல் என்று குறிப்பிட்டது மிகமிகச் சிறந்த கருத்து. திருவள்ளுவர் காலத்திலேயே வாழ்நாள் வழியடைக்கும் முயற்சி - அதாவது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேறும் முயற்சி நடைபெற்று வந்தது. இம்முயற்சியைப் பலர் பாராட்டினார்கள்-வழிவகை காட்டினார்கள். ஆயினும் பலர் காட்டிய வழி வெள்ளத்திலே கட்டிய மணற்சுவர் போன்றிருந்தது-நெருப்பிடை எழுப்பிய விறகுக் குவியல் போன்றிருந்தது. முன்னது வெள்ளத்தில் கரைந்தழியும்; பின்னையது எரிந்தழியும், அதுபோல, வாழ்நாள் வழியடைக்கும் முயற்சிகளுக்குப் பலர் நெறியல்லா நெறி தன்னைக் காட்டியபோது உண்மை நெறி காட்டுகின்றார் திருவள்ளுவர். அதாவது, உலகியல் வாழ்க்கைக்கு உரியது; வாழ்க்கைக்கு உரிய காலத்தை ஓடி ஒளிதல் மூலமோ உட்கார்ந்து உறங்குதல் மூலமோ பாழ்படுத்தல் பாலைப் பாலைவனத்தில் கொட்டியதற்கொப்பாகும். நன்றாக வாழ்தல் மூலமே விடுதலையே தவிர, வேறு வழியினால் அன்று. பசித் துன்பத்திற்கு விடுதலை, பட்டினியன்று;