பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவ மருத்துவர் உயிரைத் தேடுகின்றார். வாழ்பவனை எல்லாம் அவர் உயிர் உள்ளவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடுகாட்டில் எரியும் பிணங்கள்! நடுவிட்டில் நடைபோடும் பிணங்கள் என்று கூறுகின்றார். சுவாசிப்பதாலும் இதயம் துடிப்பதாலும் உடல் இயங்குவதாலும் உயிர் இருப்பதாக ஒத்துக் கொள்வதில்லை. இயந்திரங்களும் தான் இயக்கினால் இயங்குகின்றன. கடிகாரமும் பெண்டுலம் அசைந்தால் ஓடுகின்றது. இயந்திர மனிதனும்தான் இன்று இயங்குகின்றான். இதயம் இல்லா மனிதனும் இயங்குகின்றான். எவன் இதயத்தில் அன்பு துடிக்கின்றதோ அவனே உயிர்த் துடிப்புடைய மனிதன் என்று வகைப்படுத்துவது இதுவரை உலகம் எண்ணிப் பாராத சிந்தனை ஆகும்.

நட்பு, காதல், ஒப்புரவில் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் காணுகின்ற வாழ்க்கைப் போக்கோடு எண்ணிப் புதிய சிந்தனையைத் தந்திருப்பது எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்ற குறள் நெறிக்கு, பொது வாழ்வில் - பொது நன்மைக்குப் போராடும் பொழுது மான அவமானம் பார்க்கத் தேவை இல்லை என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது. இந்தக் குறளுக்கு வாழும் வாழ்க்கையால் உரை சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்பதைச் சுட்டிக்காட்டி இருப்பது இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகும்.

வள்ளுவம் கடவுளை நம்புகின்றது. அது ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள் - கோட்டைகள் இல்லை. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை; அது பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! என்ற வரிகள் உண்மையான, போலித்தனம் இல்லாத சமய உலகை அடையாளம் காட்டுகின்றது.

திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அன்று! அது சமயச் சார்பற்ற நூல். ஆயினும் மனித குலத்தைச் சிந்தனையில் - அறிவியலில் - வாழ்க்கையில் வழிநடத்தும் நூல். திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகின்றது. அறிவின் வழிப்படும் பொழுது அன்பு கருக்கொண்டு அருள் உருப்பெறுகின்றது என்ற வைர வரிகள் சமயம் உறைந்துள்ள இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

முறை செய்து காப்பாற்றும் மன்னவனுக்குச் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பும் அறிவுறுத்தும் நல் ஆலோசகர்களும் தேவை என்கிறார். உயிர்க்குலம் துன்புறும்