பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



257


உலகியலில் நண்பனை நேசிப்பது கூடப் பாராட்டுதலுக்குரியதாகி விட்டது. காதலரிருவர் தம்முள் அன்பு காட்டுதலும்கூட இன்று பாராட்டுக்கு உரியதாக விளங்குகிறது. காரணம் அந்தச் சூழலிலும் கூட சுயநலமும், நம்பிக்கைத் துரோகமும் நடமாடத் துவங்கி விட்டன.

மானிடன் உண்மையாகத் தேவன் ஆவது தன் பகைவனுக்கும் அன்பு காட்டும் பண்பு பெறும்போதுதான். மனித ஆன்மாவாகிய மொட்டு அன்பு காட்டும்போதே மலர்கிறது. அவனால் உலகம் கவர்ச்சிக்கப் பெற்று அவன் சுற்றமாகச் சுற்றுகிறது உலகு. அவனது மனம், மொழி, மெய் ஆகியவற்றால் கூடிய அன்பு வாழ்க்கை ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பினைப் பிலிற்றுகிறது. இந்நிலையிலேயே விண்ணுலகம் உருவாகிறது. சாதாரண மல்லிகைச் செடி அறிவில்லாத-மணமில்லாத மண்ணோடு தொடர்பு கொண்டு மணமில்லாத உணவினைக் கொண்டு மணமுள்ள மலர்களைத் தருகின்றது. நறு நெய்யில்லாத தீஞ்சுவையில்லாத வெறும் வைக்கோலையும், தவிட்டையும் தின்னும் பசு, தீஞ்சுவையான பாலைத் தருகின்றது. பகுத்தறிவுடைய மனிதனோ இனிய பாலைக் குடித்துவிட்டு, இன்னாதனவே செய்கின்றான்.

உயிர் நலம் பெற வேண்டுமாயின், அதன் உயிர்ப்பாக-மூச்சுக் காற்றாக அன்பு அமைதல் வேண்டும். மறந்தும் உயிர் தீமையோடு கூட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. மனிதன் தீமையோடு கொள்ளும் கூட்டு, மடியில் நெருப்பைக் கட்டிக் கொள்வதைப் போன்றது. மனிதன் அன்பு காட்டுதலுக்கு மாறாகப் பகைகொண்டு தீங்கு செய்யும்பொழுது அவனும் அழிகின்றான் என்ற உண்மையை அவன் உணர்தல் வேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்ற அனுபவ மொழி எண்ணத் தக்கது. திருவள்ளுவர் இந்த உண்மையை விளக்குகின்றார். கொடுமையிற் சிறந்தது தீயா? தீமையா? என்று ஆராயத் தூண்டுகின்றார். தீ மிகுந்தால்

தி.iv.17.