பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எரித்தழிக்கும். அளவோடு பயன்படுத்தினால் சமைக்கப் பயன்படும். குளிர்காயப் பயன்படும். ஆனாலும் கூரையில் வைத்தால் பற்றி எரியும். தீயினால் நன்மையும் உண்டு - தீமையும் உண்டு. ஆனால், தீமையினால் நன்மையே இல்லை. மேற்பரப்பில் ஒருவன் பிறிதொருவனுக்குத் தீமை செய்யும் கருத்தில் தீமை செய்கின்றான். உலகியல் மரபுப்படி ஒன்றில் ஒட்டிச் சாராத ஒன்று இன்னொன்றிலும் சார முடியாது. எடுத்துக்காட்டாக அடுப்பு சூடேறாமல் பானை சூடேறாது. பானை சூடேறாமல், தண்ணீர் சூடேறாது; அதுபோல, பிறருக்குத் தீமை செய்கின்றவனின் மனம், அறிவு, உணர்வு, இரத்தம் ஆகியன கெடாமல் அவன் தீமை செய்ய முடியாது. தீமையை அழிக்கின்ற ஆற்றல், அன்பிற்கே உண்டு.

உயிர் வர்க்கத்தின் இலட்சியமே அன்பு காட்டுவது தான். உலகில் எந்த ஒரு பொருளும் தன்னை வளர்த்துக் கொள்ளுகிறது. வாழ்வித்துக் கொள்ளுகிறது. ஆனாலும் தன்னுடைய வளர்ச்சியையும், வாழ்க்கையையும் பிறிதொன்றின் நலத்தோடு அல்லது பரந்துபட்ட மக்கட் சமுதாயத்தின் நலத்தோடு பொருத்தி-வளர்வதைப் பார்க்கிறோம். தாவர இனம் தழைத்து வளர்ந்து விலங்கினத்திற்கும், மக்களினத்திற்கும் பயன்படுகிறது. விலங்கினம் வளர்ந்து தாவர இனத்தின் நலத்தோடும், மக்கள் இனத்தின் நலத்தோடும் பொருந்தி வாழ்கின்றன. மனிதன் வளர்ந்து வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையும் மற்றவர்களின் நலனோடு இணையவேண்டும்; பொருந்த வேண்டும். இஃது ஓரளவு மேற்பரப்பில் தற்காலிகக் காரிய சாதனைக்காக நடைபெறுகிறது எனினும், ஆழமில்லை.

இயற்கை தனி மனிதனிடத்தில் அன்பினைத் தோற்றுவித்து வளர்க்கவே இன்பம் நிறைந்த காதல் வாழ்க்கையையும், பிறர்க்கென முயலுவதில் இன்பம் காணும் சீலம் நிறை துறவு வாழ்க்கையையும், கண்டு காட்டியது. இரண்டும் இலட்சியத்தில் ஒன்றாகவும் நடைமுறையில் வெவ்வே