பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



261


கேடுடையது தன்னலத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்தல். வாழ்வதற்காக உண்ணுகிறோமா? உண்பதற்காக வாழ்கிறோமா? என்று ஒரு வினா உண்டு. உண்ணுதலும் வாழ்தலும் தம்முள் தொடர்புடையன-பிரிக்க முடியாதன. ஒன்றித்து நிகழ வேண்டியதும் கூட. ஆனாலும் எதற்காக வாழ்கிறோம் என்ற வினாவிற்கு உண்பதற்காக என்று யாரும் கூறமாட்டார்கள். மீதூண் விரும்புபவனும் கூட உடன்பட மாட்டான். உண்பதற்காக வாழ்தலைப் போன்றது அளவிற்கு உட்பட்ட தன்னலம். அன்பிற்கு எதிரான நோய், நிர்வாணமான தன்னலமேயாகும். மேலும் அறியாமையை உணராமை, மறவாமை, போன்றவைகளும் நோய்களே. ஒருவன் தீமை செய்யலாம். ஆயினும் அவன் இயற்கையிலேயே வேண்டுமென்றே தீமை செய்கின்றானா அல்லது அறியாமையினால் செய்கின்றானா என்பதை ஆராய்ந்து அறிதல் அவசியம். அறியாமையினால் செய்யப்படுவதை பொறுத்தாற்றி இரக்கம் காட்ட வேண்டும். அவனிடத்தில் இல்லாத அறிவை உருவாக்குதல் வேண்டும். அத்துன்பத்தை மறக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும். அவனிடத்தில் அன்பு காட்டி நன்மை செய்ய வேண்டும். இயேசு பெருமான் ‘அறியாமல் செய்கின்றார்கள் மன்னித்து விடுக’ என்றார். ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க’ என்றார் திருவள்ளுவர்.

தனி மனித வாழ்க்கையில், அன்பினைப் படிப்படியாக வளர்த்து விரிவாக்கும் வகையிலேயே மனைவி, மக்கள். சுற்றம், இனம், நாடு, உலகம் என்று முறை வைப்புத் தோன்றி வளர்ந்துள்ளது. மனைவியிடத்து அன்பு காட்டத் தொடங்குபவன் முறையாக உலக மக்களையே நேசித்து அன்பு காட்டும் அளவிற்குத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனித குலத்தின் வாழ்க்கையை இணைத்து வளப்படுத்தும் ஒழுக்க உணர்வுகள் பலப்பல. எல்லா ஒழுக்க உணர்வுகளுக்கும் தூய்மை நிலை ஒழுக்கம் அன்புடைமை.