பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தண்ணிலவைப் போல, குளிர் தென்றலைப் போல இன்பம் தருகிற இனிய சாதனம் அன்புடைமை. வாழ்வித்து வாழ்விக்கும் ஆற்றல் அன்புக்கு உண்டு.......

தாளாண்மையும் வேளாண்மையும்

மனித வாழ்க்கையின் சிறந்த பண்பு இரக்கப்படுதலேயாம். இரக்கத்தின் வழித் தோன்றும் ஈதற் பண்பு இம்மைக்கும் மறுமைக்கும் நலந்தரத்தக்கது. இரக்க உணர்ச்சி இயல்பான ஒன்றே! இரக்க உணர்ச்சி இல்லாத மனிதர் இருப்பது அரிதே! இரக்க உணர்ச்சி இல்லாதாரை அரக்கர் என்று இலக்கியம் கூறும்.

‘இரக்கமென் றொருபொருள் இலாத நெஞ்சினர்
அரக்க ரென்றுளர் சிலர்’

என்றார் கம்பர். இரக்க உணர்ச்சி தோன்றலாம். ஆனால் அந்த இரக்கம் உதவியாக உருமாறி வளராது போனால் பயனில்லை. சிலர் உதட்டளவில் இரக்கம் காட்டுவர். அதனால் உலகம் பிழைத்து விடுமா? என்ன? ஐயோ பாவம்! என்ற இரக்கச் சொற்களைக் கூறினால் என்ன பயன்? வறுமையின் கொடுமை பற்றிக் கணக்கிலாத கலிவிருத்தங்களைப் பாடி என்ன பயன்? பட்டி மன்றங்களை நடத்தித்தான் என்ன பயன்? இரக்கம் துன்ப நீக்கத்திற்குரிய செயலாக உருப்பெற வேண்டும். ஈதல் அறமே! கொடை மடம்படுதல் சிறப்பே! வழங்கி வறியராதல் வரவேற்கத்தக்கதே! ஆனால் வாழும் நெறியன்று.

ஈதல் என்ற வேள்வி இடையீடின்றிச் செய்யப் பெறல் வேண்டும். வறுமை மாறும்வரை செய்யப் பெற வேண்டும். பசிக்கு ஒருவேளைச் சோறு போடுதல் ஈதலறம் ஆகிவிடாது. ஏழைக்குக் கஞ்சி வார்த்தல் பேரறமன்று. ஏழ்மையை முற்றாக மாற்றும் வகையில் வழங்குதலே ஈதல். அதுவே அறம். இன்றைய இரவலர் நாளைய இரவலராக வாழும் நிலையில்