பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்



267


செயல் செய்திடுக! ஓயாது செய்திடுக; செயல் முடியும் வரை செய்திடுக! அதுவே இன்ப வாழ்க்கை!

‘வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரில் தீர்ந்தன்று உலகு!’

612
முயற்சி, பெருமை தரும்!

உயிர் ஒரு ஊற்றுக்கண்! ஆம்! உயிர் அறிவின் ஊற்றுக் கண்; ஆற்றலின் ஊற்றுக்கண். அறிவு, ஆற்றல் இவ்விரண்டும் மேலும், மேலும் பெருகி வளரத்தக்கன. செயற்பட செயற்பட வளரும். இவ்வளவுதான் என்கிற நியதி, அறிவையும் ஆற்றலையும் பொறுத்தவரை எந்த மனிதனுக்கும் இல்லை. ஆனால் அறிவில் வளர வேண்டும்; ஆற்றலில் வளர வேண்டும் என்ற தாகம் இல்லாது போனால் இவை வளர்வதில்லை. வளராததோடன்றி உள்ளதும் மங்கி மழுங்கிப் போகும். தாகம் இருந்தால் மட்டும் கூடப்போதாது. சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அறிவு ஆற்றல் இவைகளின் வளர்ச்சிக்குரிய வாயிலை அறிந்து தொழிற்படுவதில்லை.

அறிவு, ஆற்றல் இவைகள் பெருகி வளரும் வாயில் “செயற்படுதலேயாம்”. அறியாமையைத் தொடர்ந்து அறிவல்ல, அறிவை தொடர்ந்தே அறியாமை. அதாவது அறிவும் வேட்கை இருந்துதான் அறியாமை தெரிகிறது. “அறிதோறும் அறியாமை” என்பார் வள்ளுவர். ஆற்றல் செயற்படச் செயற்படத்தான் அனுபவ வாயிலாக அது வளரும். அறிவு ஆற்றலின் வளர்ச்சிக்குத் தாய். முயற்சி காரியங்கள் நிகழ்வன அல்ல; செய்யப் பெறுபவை. முயற்சியின்றி வாளா இருப்பது, துன்பத்தில் துன்பத்திற்கு ஆட்படுத்தும். முயற்சியுடைய வாழ்க்கை இல்லாதார்க்கு சொர்க்கத்தின் கதவு தாழிடப்பெறும். நரகத்தின் கதவே திறக்கப் பெறும்.