பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வருந்துதல் கூடாது. உயிர் இயக்கம் உணவினாலாயது. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்றமை உணர்க. பசி வந்திடின் எல்லாவிதமான ஆக்கமும் கெடும்; அவலங்கள் அடுக்கடுக்காக வரும். அதனால், நாட்டின் இயற்கை வளமும் பயனற்றுப் போகும்; மனித வளமும் பயனற்றுப் போகும்.

‘நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.’

(1045)

பசித் துன்பம் இல்லாத நாடே நாடு. மற்றவையெல்லாம் நாடல்ல; காடே. இன்று தமது நாடு எப்படி இருக்கிறது? வறுமைக் கோட்டிற்குக் கீழ் 27.1 கோடி மக்கள் வாழ்கிறார்கள். வறுமைக்கோடு என்பதன் பொருள் என்ன? ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாதவர்கள் என்பதாகும். தமது நாட்டில் 17 விழுக்காட்டுக் குழந்தைகளுக்குத்தான் நல்ல சத்துணவு கிடைக்கிறது. இந்த அவலம் தொடரக்கூடாது.

பசிக்கு அடுத்தது பிணி. மனித குலத்திற்குப் பகையாக விளங்கும் பிணிகள் ஒன்றா இரண்டா? பலப்பல! நோய், இயற்கையா? இல்லை, இல்லை. செயற்கை! ஆம்! மானுடம் வாழ்வாங்கு வாழாத போது-வாழ இயலாத போது நோய் வருகிறது. தூய்மையான நல்ல காற்று, குடிக்க நல்ல தண்ணீர், சமநிலைச் சத்துள்ள உணவு ஆகியன கிடைத்துவிட்டால் நோயே வாராமல் வாழலாம். நோயற்ற வாழ்வுக்கு முதல் தேவை, காற்று. தூய்மையான காற்று தேவை. மானுடத்திற்குப் பயன்படும் உயிர்க் காற்றை நல்கி உதவும் இயல்புடைய மரங்கள் அடர்ந்து நிற்கும் காடுகள் உள்ள நாடாக விளங்க வேண்டும். மாசுபடாத காற்றுக் கிடைக்கும் நாடாக விளங்க வேண்டும். ஆலைப்புகை, புழுதி, தூசிகள் முதலியன காற்றோடு கலக்காத பாதுகாப்பு உள்ள நாடாக அமையவேண்டும். இன்று நம்முடைய நாட்டில் காற்று