பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழி ஆகியன கற்பிக்கப் பெறலாம். இம்மொழிகளின் பயிற்சி எழுத, படிக்கத் தெரியுமளவுக்கேயாம்.

ஆங்கிலம் மூலமே கற்பிக்கும் பள்ளிகள் தமிழ் நாட்டில் கூடவே கூடா. தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வியைப் பெற வேண்டும். இன்று கல்வித் துறையில் நிலவும் இரண்டு ஜாதி முறை அகற்றப்பட்டாக வேண்டும்.

நம் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழும் குடிமக்கள், முறைமன்றங்களில் தாம் தொடுக்கும் வழக்குகளிலும் தமக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளிலும் என்ன வாதிடப்படுகின்ற தென்பதே புரியாமல், ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் நிற்கும் அவலநிலை இன்னும் முற்றிலும் தீர்ந்தபாடில்லை. காரணம் இன்று முறைமன்றங்களில் தமிழில் வழக்காடுதல் இல்லை; தமிழில் ஆணைகள் இடப்படுவதில்லை. இந்த இழிநிலையை உடனடியாக நாம் நீக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லா முறை மன்றங்களிலும் இனி தமிழ் மொழியில்தான் வழக்கு விசாரனை நடைபெறல் வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே ஆணைகள் பிறப்பிக்கவேண்டும்.

அடுத்து, குடிமக்களிடத்தில் நிலவ வேண்டிய நல்லியல்புகள் சில உண்டு.

‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.’

(735)

அதாவது, நாட்டு மக்களிடையில் குழு மனப்பான்மை வளரக்கூடாது. சாதிகளின் பெயராலும் மதங்களின் காரணமாகவும் அரசியல் ஆதிக்கப் போட்டிகளின் காரணமாகவும் பல குழுக்கள் தோன்றுகின்றன. அங்ஙனம் தோன்றாமல் தவிர்ப்பது இன்றியமையாக் கடமை. இன்று நாட்டின் நிலை என்ன? எங்கும் குழுக்கள் அமைந்துள்ளன. இந்தக் குழு மனப்பான்மையால் ஒருவரை ஒருவர் முன்னேற