பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமது நாட்டின் இயற்கை வளத்தை நாம் முற்றாக இன்னமும் அனுபவத்திற்குக் கொண்டு வரவில்லை. செல்வம் என்று பொதுவாகக் கூறியதால் அனைத்துச் செல்வங்களும் அடங்கும். செல்வம் படைக்கப்படுவதே. அதனால்தான் திருக்குறள், "செய்க பொருளை" என்று கூறியது. நாட்டின் அரசு, செல்வச் செழிப்பிற்குத் திட்டமிட்டு, அத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை மக்களிடம் தந்து ஓயாது மக்களை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்; செல்வ வளம் வருதலுக்குரிய வாயில்கள் புதியன புதியனவாகக் காணப்பெறுதல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.’

(385)

என்று கூறுவார். செல்வத்தை ஈட்டவேண்டும். ஈட்டிய செல்வம் தொகுக்கப் பெறுதல் வேண்டும். செல்வம் தொகுக்கப் பெற்றால்தான் அது மூலதன வடிவத்தைப் பெற்றுத் திரும்பவும் செல்வ உற்பத்திக்குரிய முதலீடாக அமையும் தகுதியைப் பெறும். இங்ஙனம் உருப்பெறும் மூலதனம்தான் திட்டங்களுக்குரிய முதலீடாக அமைய முடியும். அங்ஙணமின்றிக் கருவூலத்திற்குச் செல்வம் வருவதற்குமுன்பே கண்டபடி திட்டமில்லாத செலவுகளைச் செய்தால் செல்வம் சேராது. நமது நாட்டில் இயல்பாகத் திட்டம் இல்லாத செலவுகள் அதிகம். தனி மனித வாழ்க்கையிலிருந்து நாட்டு வாழ்க்கை நிலை வளர திட்டமில்லாத செலவுகள் மிகுதி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த முறை கூடாது. அறவே தவிர்க்கப் பெறுதல் வேண்டும். அவசியமாயின் திட்டமில்லாத செலவுகள் 10 முதல் 20 விழுக்காடு வரை வரலாம். செல்வம் தொகுக்கப் பெற்ற பின்பு நாட்டின் வளர்ச்சிக்கு-மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். செல்வம் வளர்ந்து நுகர்பொருள்கள் சந்தைக்கு வரத்