பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



283


தொடங்கிய நிலையில் அந்த நுகர்பொருள்கள் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும். நமது நாட்டில் பலர், நல்ல சத்துணவு வகைகளை நுகர்ந்தறியாதவர்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நாடாக அமைய வேண்டும். யாரானாலும் அதிகாரத்தாலும் பணத்தாலும் பெறும் சலுகைகளை அறவே நீக்க வேண்டும்.

வாழ்க்கை யென்பது துன்பமானதன்று. பொதிசுமையுமன்று. வாழ்க்கை இன்புறு நலன்கள் கூடியதாக மக்களுக்குக் கிடைத்து, மக்கள் களிப்பாக இன்பமாக வாழ்தல் வேண்டும். இன்புறு நலன்கள் என்று கூறின் அவை ஒன்றா? இரண்டா? பலப்பல; அவை உலக அரங்கில் நாளும் வளர்ந்து வருகின்றன. இவையனைத்தையும் மக்கள் ஆர்ந்து அனுபவிக்கும் நாடே நல்ல நாடு.

அடுத்து, பாதுகாப்பு நிறைந்த நாடாகவும் இருக்க வேண்டும். எங்கே பாதுகாப்பு இல்லையோ, அங்கே உற்பத்தி இல்லை; செல்வம் இல்லை; இன்பம் இல்லை; கடைசியாக ஆட்சியும் இல்லை என்றாகி விடும். நாட்டு மக்களுக்கு அரசு வழங்கவேண்டிய பாதுகாப்பைப் பற்றிச் சேக்கிழார் கூறுவதை அறிந்து கொள்ளுதல் நலம்.

‘மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் கும்காலைத்
தான்தனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த் தறம்காப்பான் அல்லனோ?’

என்பது சேக்கிழார் வாக்கு.

நாட்டை ஆள்பவர்களால், அவர்களுடைய ஆட்சியால் மக்களுக்குத் துன்பம் வருதல் கூடாது. ஆட்சியால் மக்களுக்கு நேரிடக்கூடிய துன்பத்தில் தலையாயது பயம். பயத்திற்கு மக்கள் இரையாகக் கூடாது. தாய்ப்பசுவினைக் கன்று அணைந்து செல்லுமாப் போல் மக்கள், ஆட்சியை அணைந்து செல்ல வேண்டும். ஆட்சியினரால் துன்பம்