பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாள்தோறும் கற்றறிதல் வேண்டும். தொடங்கிய பணியைச் செய்து முடிக்கும் திறனுடைய ஆளுமை வேண்டும்.

அடுத்து, ஆள்பவர்களுக்குத் தமது கட்சி இயற்றும் செயல்முறைகளில் மக்களை ஒத்துழைக்கும்படி செய்து கொள்வதற்குரிய சொல்லாற்றல் இருக்க வேண்டும். ஆளுமைத்திறன் வேண்டும். நன்றாற்றும் பொழுது எதிர்ப்படக்கூடிய இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ளவும் தொடர்ந்து செயற்படக்கூடிய ஆற்றலும் உளப்பாங்கும் தேவை. செய்யும் பணிகளில் தூய்மை வேண்டும். திருக்குறளில் நேரிடையாகக் கையூட்டு (இலஞ்சம்) பேசப்படவில்லை. ஆனாலும் திருக்குறள், கையூட்டைப் பற்றியும் பேசுகிறது. நாடாளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு வறுமை வந்துற்றபோதும் அவர்கள் பழிக்கப்படுவனவற்றைச் செய்யக்கூடாது என்று கூறுகிறது.

‘ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.’

(656)

‘பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.’

(657)

‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.’

(658)

ஆகிய குறள்கள் கையூட்டைப் பற்றியனவேயாம். நாடாள்வோரின் தாய்க்குப் பசி என்றால் வறுமை என்பதுதானே பெறப்படுகிறது. ஈன்ற தாயின் பசி நீக்க இழிவாயின செய்யக் கூடாது என்றால் கையூட்டு வாங்கக் கூடாது. நாட்டின் நிதியை-மக்களின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தானே பொருள்! பழியுடன் கூடியதாகிய கையூட்டு, கள்ளக் கணக்கு முதலியவற்றால் வரும் ஆக்கத்தைவிட, நாட்டை ஆள்பவர்களுக்கு வரும் வறுமையே நல்லது என்று கூறியதனாலும் அரசைப் பயன்படுத்தி, நாட்டை ஆளும்