பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



289


பொறுப்பிலிருப்பவர்கள் பொருள் சேர்ப்பதை விலக்குகிறது திருக்குறள்.

மற்றும், நீதி நூலோர் ஆகாது என்று கூறிய கள், சூது முதலியவற்றால் பொருளீட்டல், ஆளப்படும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஆசையையும் காட்டிப் பொருளீட்டல்-அதாவது பரிசுச் சீட்டுக்கள் மூலம் பொருளீட்டல் முதலியன தவறு என்று திருக்குறள் கூறுகின்றது. ஏன், ஆள்பவர்-ஆளப்படுபவர்களிடம் இரந்து கேட்டு வாங்குதலையும் கூட ஆகாது என்று திருக்குறள் மறுக்கிறது. இரப்பவர் ஆட்சியாளர். அவர் கையில் வேல் இருக்கிறது. அதனால் அது இரத்தல் போலத் தோன்றினாலும் மறைமுகமான கையூட்டேயாகும். இல்லை இது கொள்ளையாகக் கருதப்படும். அரசிடம் ஆளப்படுபவர்கள்-மக்கள் இரந்து உயிர் வாழ்தல் கூடாது-ஆகாது என்பதையும் இந்தக் குறள் வலியுறுத்துகிறது. ஆகவே தகுதியுடையவர்களை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாதி, மதம், உறவினர் என்ற அடிப்படையில் வாக்களிப்பது நல்ல மரபன்று; நன்மையும் பயவாது; தீமையே வளரும். வாக்களிப்பில் பணம் விளையாடக் கூடாது; வாக்கு விற்கப்படுதல் கூடாது. தேர்தலில் வாக்குகளை வழங்குவதில் பணத்தின் செல்வாக்கு, ஆதிக்கம் செலுத்துமானால் எப்போதும் நல்லாட்சியே வாராது. அடுத்து கூட்டங்களைக் கூட்டிக் காட்டி பிரமிக்க வைத்து இவர்களே வெல்வார்கள் என்ற முடிவை எடுத்துக் கொள்ளச் செய்து தேர்தலில் வெற்றி பெற முயல்பவர்களுக்கு வாக்காளர்கள் வாக்களிக்கின்ற அறியாமை அகல வேண்டும். அதோடு கவர்ச்சி முதலியவற்றினாலும் வாக்குகள் வாங்குவதற்கு முயலக்கூடாது. வாக்காளர்கள் அறிவார்ந்த முறையில் சிந்தித்துத் தெளிவான முடிவை எடுத்துக் கொண்டு வாக்களித்தல் வேண்டும். இத்தகு அறிவார்ந்த செயல்முறைக்கு அரசியல் கட்சிகள் துணை செய்ய வேண்டும்.

தி.IV.19