பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணைநல வாழ்த்து



293


மனைவியாகச் செல்லும் வீடு, ஊர் இவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்! பழகிக்கொள்! நாம் இங்ஙனம் கூறுவது ஒத்துப்போவதுக்குரியது.

திருமணத்திற்குப் பிறகு இயல்பாகவே கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி பழக்கங்கள் மாறும்! இஃது இயற்கை! ஆம்! தம்முள் மாறி அன்பு காட்டுவதால் சுவை முதலியன கணவனுக்கு மனைவியைச் சார்ந்தும் மனைவிக்குக் கணவனைச் சார்ந்தும் ஏற்படுகின்றன. ஆதலால் கணவன் உவப்பனவற்றை உவந்து ஏற்றுக்கொள்! கணவனின் சுற்றத்தை உன் சுற்றமாக ஏற்றுக்கொள்! தமிழ் மரபில் சுற்றம் பேணல், குடி செயல் போன்ற அறங்கள் இல்லறத்தார் செய்ய வேண்டியவை. அந்த அறங்களை உன் கணவன் செய்வதற்குத் துணையாக இரு. குடும்பத்தின் சூழலில் அமைதி நிலவினால் தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தின் அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறிவிடாதே!

அன்புள்ள செல்வி!

நீ, படித்த பெண். உனக்கு அதிகம் எழுத வேண்டுமா என்ன? நீ, கணவன் வீட்டுக்குப் போகும் பொழுது திருக்குறளை எடுத்துக் கொண்டு போ! அடிக்கடி திருக்குறளைப் படி! திருக்குறள் காட்டும் நெறியில் வளர்க! வாழ்க!

3

விருந்தோம்பல் என்பது உலகந் தழீஇய பண்பு. நமது நாட்டில் விருந்தோம்பல் பண்பைப் பாராட்டிப் புகழாத இலக்கியம் இல்லை. தொல்காப்பியம் முதல் திருஞானசம்பந்தர் தேவாரம் வரை விருந்தோம்பல் பண்பு பாராட்டப்படுகிறது. பெரியபுராணத்தில் விருந்தோம்பற் பண்பு போற்றப்படுகிறது.