பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குடும்பத்தலைவன் அறத்தின் பிரதிநிதி. அன்பு-பண்பு. அறம்-பயன்.

அன்புள்ள செல்வி! அன்பு, அர்ப்பணிப்புத் தன்மையுடையது. நெகிழ்ந்து கொடுப்பது; வாழ்வித்து வாழ்வது. அன்பு, ஒரு பண்பு. அறம், வாழ்க்கையின் இலட்சியம்; குறிக்கோள். அறம் செய்ய உடல் வலிமை தேவை; வண்மை தேவை; துணிவு தேவை. அறத்தில் நெகிழ்ந்து கொடுத்தல் இயலாது. அன்பு என்ற பண்பின் உறைவிடமாகக் குடும்பத் தலைவி விளங்கினால் குடும்பத்தில் இன்பச் சூழல் அமையும்; அமைதி நிலவும்; உண்பன கிடைக்கும்; ஊரவர் கேண்மையும் கிடைக்கும். அன்பு, குடும்பத்திற்கு உயிர். அறம் பலரையும் வாழ்விப்பது. ஈதல், அறம், அறநெறிபேணும் குடும்பத் தலைவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் அரனாவான். வாழ்க்கையின் பயனே அறம். இல்லற வாழ்க்கையையே அறம் என்பார் திருவள்ளுவர். “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று திருக்குறள் இல்லற வாழ்க்கையைப் போற்றுகிறது. ஆயினும் அந்த இல்லறம் பிறர் பழிக்க இயலாதவாறு அமைதல் வேண்டும். அன்பின் பிரதிநிதியாக வாழ்ந்த கண்ணகி, காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலிய மாதரசிகளை முன்னுதாரணமாகக் கொள்க. ஆனால் இந்த மாதரசிகளின் வாழ்க்கையில் வாய்த்த கணவன்மார்கள் அறத்தின் பிரதிநிதிகளாக இருக்கத் தவறி விட்டார்கள். ஆயினும் பொறுத்தாற்றும் பண்புடன்-தத்தம் கணவன்மார்களை நெறிப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இளமை மீதூர எளியராகி-ஒழுக்கநெறி தவறிய திருநீலகண்டரை அவர்தம் மனைவி நெறிமுறைப்படுத்திய வரலாறு நுட்பமானது. மனைவியின் ஆணையை ஏற்றுக் கொண்டு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து இல்லறக் கடமைகளில் வழுவாமல் வாழ்ந்துள்ளார். ஆயினும் புணர்ச்சி இல்லை. இந்த அற்புறு புணர்ச்சியின்மை அயலவருக்குத் தெரியாது. சொற்காக்கும் கற்புடைப்