பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெரும்பாலும் துறவியர் வாழ்க்கை தனிமனித நிலையிலானது; ஒரு ஆள் சைக்கிளில் போவது போன்றது. இல்லறம் இரண்டு பேரையும் அதற்கு மேலும் பலரையும் சார்ந்தது. இரண்டு பேர் சைக்கிளில் போவது போல் ஒருவர் சைக்கிளில் போவதில் விபத்து நடக்க வழியில்லை. அப்படியே விபத்து நடப்பினும் ஆபத்து குறைவு; துன்பம் குறைவு. ஆனால், இல்லறம் என்பது அப்படியல்ல. இரண்டு பேர் சைக்கிளில் சவாரி செய்வது போன்றது. ஓட்டுநர் கணவர். பின்னே உட்கார்ந்திருப்பவர் மனைவி. ஓட்டுநர் ஒழுங்காக ஓட்டாவிட்டாலும் விபத்து ஏற்படும். அல்லது பின்னே உட்கார்ந்திருப்பவர் சரியாக இல்லாமல் ஆடினாலும் விபத்து ஏற்பட்டுவிடும். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளான பின் நபர் எண்ணிக்கை கூடும். ஆதலால் செல்வி, நிதானமாக இல்லறத்தை நடத்தக் கற்றுக்கொள். எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாமல் நடத்தக் கற்றுக்கொள்; கணவனையும் நெறிப்படுத்துக.

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் கடன் கூடாது. “இரவில் வெறும் வயிற்றோடு கூடப் படுக்கலாம்; கடனோடு படுக்கக் கூடாது” என்பர். ஆதலால் குடும்ப வருவாய்க்குத் தக்கபடி குடும்பத்தை நடத்து. நீயும் சோம்பலாக இல்லாமல் பொருளீட்ட முயற்சி செய்ய வேண்டும். வீட்டுக் கொல்லையில் தோட்டம் அமைத்தல் நல்ல முயற்சி. நல்ல பச்சைக் காய்கறிகள் உண்ணக் கிடைக்கும். வீட்டு உபயோகம் போக மீதியை விற்றும் காசாக்கலாம். அடுத்து, வீட்டில் ஒரு பசு இருப்பது அழகு. திருமகள் நலம் வந்து சேரும். வீட்டில் எல்லாருக்கும் பூரண உணவாகிய பால் கிடைக்கும். எஞ்சியதை விற்றுக் காசாக்கலாம். தையல் முதலிய வீட்டுத் தொழில் செய்யலாம். இங்ஙனம் செய்து பொருள் ஈட்டுதல் வருவாய்க்குத் துணை செய்யும். பொழுதும் நல்ல வண்ணம் கழியும். சுறு சுறுப்பாக வாழலாம்.