பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணைநல வாழ்த்து



303



பொருள் நலம் பேணல் குறித்துத் திருவள்ளுவர் அருமையான நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார். தேவைக்கேற்பத் தாமேமுயன்று பொருள் ஈட்டுதல் நன்று. அஃது இயற்கையாகப் பலருக்கு இயலாத ஒன்று. ஆதலால் வருவாய் பெருகி வளரவில்லை யெனில் கவலைப்பட்டு என்னாவது? மற்றவர் கைப் பொருளை எதிர்பார்ப்பதும் கேட்பதும் இழிவானது மட்டுமல்ல. அவர்களுடைய சூழலையும் பாதிக்கும்! மிச்சம் மனத்துன்பமும் பகையும்தான்! எல்லா இடங்களிலுமே எல்லாருடைய வீடுகளிலுமே பொருளியல் சிக்கல் இருக்கும். நாம் மற்றவருக்குத் தொல்லை தரக்கூடாது. ஒரு சிலர் மற்றவர்களுடைய வேதனை புரியாமல் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்துவர். இது வாழும் இயல்பன்று. வருவாய் பெருகி வளரவில்லை யாயினும் செலவுத்துறை அகலாமல் இருந்தால் செல்வம் பெருகும்; வளரும்.

‘ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.’

478

என்பது திருக்குறள். ஆதலால் குடும்ப வரவு-செலவைத் திட்டமிட்டு இயக்கு. வரவுகளை வங்கியில் இட்டு வைத்து எடுத்துச் செலவு செய்! செலவு செய்யும் உணர்வுக்கு வங்கி ஒரு பாதுகாப்பு! கையிலிருந்து காசுகள் செலவாவதைவிட, வங்கியில் இயக்கும் செலவில் சிக்கனம் ஏற்படுகிறது. வங்கி, செலவைக் கண்காணிக்கும் உணர்வைத் தருகிறது. இது நமது அனுபவமும் கூட!

வரவுக்குள் செலவு செய்யத் திட்டமிடு! செலவுத் திட்டத்தில் முதற் செலவு என்ன தெரியுமா? எதிர்வரும் காலத்திற்குச் சேமித்தல்தான் முதற் செலவு! நம்மில் பலர், “வாழ்க்கையை நடத்தவே வரவு போதவில்லை. எங்ஙனம் சேமிப்பது?” என்பர். இது தவறு. உழைத்து ஈட்டும் காலத்தில் சேமிக்கத் தவறிவிட்டால் உழைக்க இயலாத காலத்தில்