பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



27



வான்மழை சுரத்தலுக்கு உதவியாகக் காடுகளைப் பேணி வளர்க்க வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மரம் வைத்தால்கூட நமது நாடு சோலையாக மாறிவிடும். ஆதலால், திருக்குறள் நெறி நிற்போர் தாம் பிறந்த நாள் நினைவாக ஆண்டுதோறும் மரம் நடுதல் நல்லது.

1. மழைத் தண்ணீரைத் தேக்கிப் பாதுகாத்தல்.

2. தண்ணீரை வீணடிக்காமல் உரியவாறு பயன் படுத்துதல்.

3. தண்ணீரின் தூய்மை கெடாமல் பாதுகாத்தல்.

4. மழைவளம் காணக் காடுவளம் காணல்.

ஆகியன வான்மழையைச் சிறப்பிக்கும் நெறி முறைகள்.

3. நீத்தார் வழிபாடு

“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்பர். வாழ்க்கையில் குணமென்னும் குன்றேறி நின்று விளங்குபவர்கள் உயர்ந்தோர். இவர்களே நீத்தார். நீத்தார் பெருமைகளைப் பாராட்டி அவர்தம் நெறியில் நிற்றல்.

1. இதுதான் உலகியல் என்று கருதிப் போற்றும் பொருள் முதலியவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டொழுகும் ஒழுக்கத்தை விட்டவர்களின் பெருமை உயர்ந்தது.

2. புலன்கள், பொறிகளின்மீது தமது அறிவாட்சியைச் செலுத்தி முறையாக வைத்திருப்பவர்கள்.

3. உலகியல் வாழ்க்கையின் பகுதிகளாகிய கடவுள், உயிர், நிலம், நீர், தீ, வளி, வெளி இவற்றை நுகரும் பொறிகள், பொறிகளுக்குத் துணை நிற்கும் அறிகருவிகள், மனம், அறிவு (புத்தி), நடைமுறை (சித்தம்), அகங்காரம், செய்கருவிகள் ஆகியவற்றின் இயல்பறிந்து மெய்ப் பொருள்களை (தத்துவங்களை)ச் சிந்தனையால் நாள்