பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் காட்டும் நீதி



307



அரசனின் இறையாண்மை, முறை செய்து காப்பாற்றுவதாக இருந்தால்தான் இறை என்று வைக்கப்படும் என்றும் கூறினார். இதனால், அரசனின் அதிகாரத்திற்கு எல்லை சுட்டினார். அரசனின் அதிகாரம் குடிகளின் நலன் தழீஇயதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.’

388

என்று கூறினார்.

மேலும், அரசன் நெறிமுறை பிறழின் அரசை இழப்பான் என்றும் எச்சரித்தார். அரசனின் முறை என்ன? நெறிமுறை என்ன?

அரசன் தனது குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் சாதி, குலம், கோத்திரம், மதம், உற்றார் உறவினர், வேண்டியவர் வேண்டாதவர் என்று பிரிக்கக் கூடாது. மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்க்க வேண்டும். பிறப்பில் அனைத்துயிர்களும் ஒன்றே. பிறப்பில் சாதியும் இல்லை. மதங்களும் இல்லை. பணக்காரனும் இல்லை; ஏழையும் இல்லை. பிறப்பில் வேறுபாடுகளைக் கற்பிப்பது தமிழர் வழக்கல்ல; மரபும் அல்ல!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’

(972)

என்பது திருக்குறள்.

அரசு, பிறப்பின் அடிப்படையில் மனிதன் என்ற அடிப்படையில் மக்களை நடத்த வேண்டும்; உரிமைகளை வழங்க வேண்டும். மனித உரிமைகள் இயற்கையாயமைந்தவை. கடவுளால் நியதி செய்யப் பெற்றவை. பிறப்பிலேயே அமைந்த உரிமைகளை யாரும் பறிக்கக்கூடாது.

இன்றைய உலக நாடுகள் சபை கூட, மனித உரிமைகள் சாசனம் கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்தியிருக்கிறது.