பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
குறளியம் முன்னுரை

“குறள்” திருக்குறளைக் குறிக்கும் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. “இயம்” என்பதற்கு “இயக்கம்” அல்லது “கருவி” என்று பொருள் கொள்ளலாம். கருவி இயக்கத்தின் வழி விளக்கமுறுவது. ஆதலால் இயக்கம் பற்றி ஆராய்ந்தாலே கருவியின் இயல்பும் புலப்படும். திருக்குறள் தோன்றிய பிறகு, தமிழக வரலாற்றை முன்னும் பின்னும் இயக்கும் ஆற்றலை, திருக்குறள் தனக்கே உரிமையாகக் கொண்டது. திருக்குறள் தோன்றிய பிறகு தோன்றிய தமிழகத்து அறிஞர்களின் கருத்து ஊற்றத்திற்கு, சிந்தனைக்குத் துணையாகத் திருக்குறளே அமைந்து விளங்கியிருக்கிறது. திருக்குறளைத் தழுவாத அறிஞர்கள் நீரினின்றும் பிரிந்த மீனைப்போல் சமுதாய வரலாற்றின் நினைவில் இல்லாமலே மறைந்து போயினர். ஒரோ வழி ஒரு சிலர் திருக்குறளின் முகவரியில் ஒவ்வாத கருத்துக்களைச் சொல்லியும் ஊடுருவல் செய்துள்ளனர். ஆயினும் திருக்குறள் தனித் தன்மையுடையதாக இன்றும் விளங்குகிறது.

திருக்குறள் ஓர் இலக்கியம்; சமயநூல்; சமயச் சார்பற்ற நூல்; நீதி நூல் என்றெல்லாம் பலபடப் பாராட்டுவர்.