பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்பாராட்டுரைகள் புனைந்துரையல்ல; ஆனால் முழுமையான திறனாய்வுமல்ல. மனித குலத்தின் வாழ்க்கை அனைத்தும் முறையாகத் தழுவப் பெற்றுச் செய்யப்பெற்ற ஒரு முழுநூல் திருக்குறள். திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் ஒரு புதிய சமுதாய வாழ்வியலை அறிமுகப் படுத்தியுள்ளார். அது திருக்குறள் தோன்றிய காலத்தில் நிலவிய பல்வேறு வாழ்வியல் நெறிகளை மறுத்திருக்கிறது. சில நெறிகளை உடன்பட்டும் இருக்கிறது. ஆதலால் திருக்குறளே ஒரு வாழ்வியல் நூலாக, மக்கட் சமுதாயத்தின் வாழ்வை இயக்கும் கருவியாக, மக்களின் வாழ்வியக்கமாக இருந்தது-இருக்க வேண்டியது என்ற அடிப்படையில்தான் குறளியம் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. அவ்வியக்கத்தின் குரலாக ‘குறளியம்’ ஒலிக்க இருக்கிறது; மனித குலத்தின் இயற்கையைக் குறளியத்தின் வழி இயக்குவதென்பது தலையாய நோக்கம். குறளியம் அனைத்து வாழ்வியல் நெறிகளையும் ஆராயும்; ஒப்புநோக்கும்; ஏற்பனவற்றை ஏற்கும்; மறுப்பனவற்றை மறுக்கும். குறளியத்துக்கு, திருக்குறளை வைதிகமாக்குவது நோக்கமன்று. அங்ஙனம் செய்வதைத் திருவள்ளுவரும் உடன்படார். ‘அறிதோறறியாமை’ என்பது வள்ளுவம். குறளியத்துக்குப் பின் தோன்றியவைகளிலும் உண்மையில் குறளியத்தைவிடச் சிறந்தவையிருக்குமானால் அவற்றை ஏற்பதில் குறளியம் மகிழ்ச்சியுறும். ஏன்? அந்தக் கருத்துத் தோன்றுமளவுக்குக் குறளியம் அவர்களை அழைத்து வந்திருக்கிறது என்பது பொருள். இது குறளியம் தொடர்ந்து திருக்குறளை வாழ்வியலாக்கும் வழிவகைகளை ஆராயும்.

இன்று நாவலந் தீவில் (இந்திய நாட்டில்) பல்வேறு வாழ்வியற் சட்டங்கள் தோன்றியுள்ளன. அதுபோலவே மனிதகுல வாழ்க்கையை வழிநடத்துவனவாகப் பல்வேறு நூல்களும் விளங்குகின்றன. மார்க்சீயமும் இன்று இந்த