பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறளியம் முன்னுரை



315


வரிசையில் அணிபெற அமைந்துள்ளது. இச்சூழ்நிலையில் குறளியத்தை மையமாகக் கொண்ட வாழ்வியல் எது? என்று அறிவது வையகத்திற்கு மிகுதியும் பயன்தரும்.

இன்றைய வாழ்வியல் உலகம் தழீஇயதாக வளர்ந்து வருகிறது. ஆயினும் முரண்பாடுகள் நீங்கியபாடில்லை. எங்கும் காழ்ப்பும் கலகமும் தலைவிரித்தாடுகின்றன. எல்லா நாடுகளும் படைகளுக்குரிய செலவைக் கூட்டிக் கொண்டே போகின்றன. சிறைக் கூடங்களும் எண்ணிக்கையில் பெருகி வளர்கின்றன. இந்தச் சூழ்நிலையில் குறளியம் வையகத்திற்கு எத்தகைய வழியைக் காட்டுகிறது? குறளியம் காட்டும் வழி சமயச் சார்புடையதா? இல்லை, சமயச் சார்பற்றது. வள்ளுவத்தின் சமயம் தனித்தன்மையுடையது; சமயக் கணக்கர் வழிசாராதது. குறளியம் நாடு, மொழி, இனங்களைக் கடந்தது. குறளியத்தின் நெறி புது நெறி; பொதுநெறி. குறளியம் உலகந்தழீஇயது; நம்பிக்கைக்குரியது; எளிதில் பின்பற்றத்தக்கது. இதுவரையில் தோன்றியுள்ள அனைத்து நூல்களிலும் திருக்குறள் உயர்ந்தது; வையகத்தை வாழ்வாங்கு வாழ வழிநடத்துவது. குறளியத்தில் தத்துவங்கள் உண்டு; மெய்ப்பொருள் சிந்தனைகள் உண்டு; பொருளியல் கோட்பாடுகள் உண்டு; சமுதாய நெறிகள் உண்டு; அரசியல் கொள்கைகள் உண்டு; காதல் உண்டு; துறவும் உண்டு; ஆக, குறளியம் ஒரு பொது மறை; தமிழ்மறை: குறளியத்தில் அறநெறி அடையாளம் காட்டப்படுகிறது; பொருள்நெறி போற்றப்படுகிறது. குறள்நெறியில் ஆள்வினையாளர்களும் அருளாளர்களும் சமுதாயத்தை வழி நடத்தும் உறுப்புகளாவார். குறள்நெறி நிலமிசை நீடுவாழ வழி காட்டுகிறது; உயர்ந்த உலகத்தையும் உய்த்து உணர்த்துகிறது. குறளியத்தில் அரசியல் உண்டு; ஆனால் அரசியல் வாழ்க்கை ஒரு பகுதியாக உணர்த்தப்படுகிறது. குறளியத்தில் நீதி வற்புறுத்தப்படுகிறது. குறளியம் உணர்த்தும் நீதி