பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மிக்குயர்ந்தது; பகுதியின் பாற்பட்டொழுகாதது. குறளியம் மனித உலகத்தை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. குறளியம் கடவுளை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பொய்த் தேவர்களை மறுக்கிறது. இது குறளியத்தின் முன்னுரை.

தமிழகத்தின் வாழ்வியக்கமாகக் குறளியம் இடம் பெற்றாக வேண்டும். தமிழினத்தின் வாழ்வியலாகக் குறளியம் இடம் பெறும் பொழுதுதான் சாதி வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கை வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். மனித உலகத்தின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் வைதீகக் கொள்கைகள் நீங்கும். நாளையும் கோளையும் வழிபடும் மூடப்பழக்கங்கள் தொலையும். மருட்டுகின்ற மதத் தலைவர்களின் கொட்டம் ஒடுங்கும். பொய்யும் கற்பனையும் போயகலும்; வாய்மை வந்தடையும். இத்தகு குறளியத்தினுடைய அருமையை அறிந்த ஆன்றோர்கள் ஏற்றுப் போற்றியுள்ளனர். மெய்கண்ட நூல் "மெய்வைத்த சொல்" என்று போற்றியது. சங்க காலம் 'அறம்' என்று போற்றியது. புதிய சிந்தனையாளன் ஆல்பர்ட் சுவைட்சர், "திருக்குறள் போன்ற நீதி நூல் உலக இலக்கியத்திலேயே வேறு இல்லையென்று கூறலாம்” என்று போற்றியுள்ளார்.

தமிழினம் தனது தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் தனது தனித்தன்மையைப் பாதகாத்துக் கொள்ளவும், உலகம் தழுவி வாழவும் அதன் வாழ்வியல் வரிச்சட்டமாகக் குறளியமே இடம் பெற வேண்டும். இந்த நோக்கம் நிறைவேறுமானால் குறளியம் வெற்றி பெற்றதாக அமையும். என்றைக்கு மனித குலம் அறிவறிந்த ஆள்வினையுடையதாக, அன்புற்றமர்ந்த வழக்கமுடையதாக, அருளாளும் நெஞ்சினதாக ஒப்புரவு நெறி நின்று ஒழுகுவதாக நயத்தக்க நாகரிகமுடையதாக வாழ்கின்றதோ அன்றே குறளியம் உண்மையில் வெற்றி