பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



29


3. மனத்தின்கண் மாசின்றி வாழ்தலே அறம். மனத்தின்கண் மாசுகொண்டு செய்யும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன.

4. மனத் தூய்மைக்குக் கேடு செய்யும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கையும் தாம் விளக்கி வாழ்தலே அறம். இத்தீமைகள் மற்றவர்களிடம் தோன்றாதவாறு, தாம் முறையாக வாழ்தலும் அறம்.

(அ) அழுக்காறு: அழுக்கு வழி, அதாவது மற்றவர்கள் செல்வம், புகழ் முதலியவற்றைப் பெற்றிருப்பதையும் மகிழ்ந்து வாழ்வதையும் பொறுத்துக் கொள்ள முடியாது தவித்தல். எந்த வகையிலும் அழுக்காறு, ஒன்றைப் பெறத் தூண்டாது; ஊக்குவிக்காது; வழி நடத்தாது. அழுக்காறு, மற்றவர்கள் பெற்றிருப்பதற்குக் குற்றம் கண்டு பிடிக்கவும், அதனை அவர்கள் இழந்து அல்லற்படுமாறு செய்யவுமே விரும்பும். ஆதலால், அழுக்காறு கொள்ளுதல் கூடாது.

அழுக்காறு என்ற கொடிய தீமையை விலக்க ஒரே வழி மற்றவர்கள் வாழ உரிமையுடையவர்கள், அவர்கள் வாழ வேண்டும் என்று நினைத்தால், மற்றவர்கள் வாழத் தம் வாழ்க்கையின் தேவைகளைக் கூட விட்டுக்கொடுத்தல்; குறிப்பாகச் சொன்னால் வாழ்தலைவிட வாழ்வித்தலில் ஆர்வம் காட்டுதல்.

(ஆ) அவா: வாழ்க்கைக்கு இன்றியமையாதன அல்லாத வற்றையும் விரும்புதல். எதையும் மிகையாக விரும்புதல் கூடாது.

(இ) வெகுளி: விரும்பும் ஒன்றைப் பெறாதபோது வரும் சினம் (கோபம்). இது கூடவே கூடாது.

(ஈ) இன்னாச்சொல்: சினத்தால் (கோபத்தால்) கடுஞ் சொற்களைக் கூறுதல். இது கூடாது.