பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளை நீதிக்குத் தலைவன் என்று நம்புகிறார்கள். கிறித்துவ இசுலாமிய சமயங்கள் இறைவனின் நியாயத் தீர்ப்பு நாளைப் பெரிதும் எடுத்துக்காட்டிப் பேசுவனவாம். தமிழகச் சமயநெறி இறைவனை ‘நீதி’ என்றே அழைக்கிறது. இறைவனுடைய நீதியையே இந்த உலகில் அரசு செயற்படுத்துவதாகக் கருதுவது ஆன்றோர் மரபு. இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் அரசர்கள், தாங்கள் ஆண்டவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக் கொண்டு அட்டகாசம் செய்தார்கள். ஆனால் நம் தமிழகத்து அரசர்கள் நெறி முறையின் காவலர்களாக-நீதி தேவதையின் திருக்கோயில்களாக விளங்கினார்கள். இளங்கோவடிகளின் சிலம்பு காட்டும் நெடுஞ்செழியன், சேக்கிழார் பெருமான் காட்டும் மனுநீதிச் சோழன் போன்ற அரசர்களின் வரலாற்றைப் போல உலக வரலாற்றில் வேறு எங்குண்டு! அதனாலன்றோ திருவள்ளுவர்,

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறையென்று வைக்கப் படும்’

388

என்றார்.

திருவள்ளுவர், திருக்குறளில் விழிப்புணர்வுடன் சொற்களை அடுக்கிப் பாடியிருக்கிறார். திருவள்ளுவர், அரசுக்குக் காட்டும் இறைமைச் சிறப்பு, முறைசெய்து காப்பாற்றும் தகுதியைச் சார்ந்ததேயாம்; பிறப்பின்பாற் பட்டதன்று. முறைசெய்து காப்பாற்றும் தகுதியில் சிறந்த அரசன், கடவுளைப் போல எண்ணிப் பாராட்டப் பெறுவானேயன்றி, அவன் கடவுளல்லன்.

நீதி என்பது மனித உலகத்து வாழ்வியலில் ஒரு சிறந்த தத்துவம். நீதி என்ற தத்துவம் ஆழமானது; உருவெளித் தோற்றத்தில் மட்டும் காணக்கூடியதன்று- உணரக்கூடியது மாகும். நீதியை வழங்கும் முறை-நீதியைச் செயற்படுத்தும்