பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



331


செய்யவே அதிகாரம் என்ற உப்பு வழங்கப்பெற்றது. ஆனால், இன்று உணவில் உப்பைப் போலல்லாமல் கடல் நீரில் உப்பைப்போல் பல அரசுகளில் அதிகார உரிமை மிகுந்து காணப்படுகின்றது.

அரசுக்கு இரண்டு வகையான உரிமைகளை வள்ளுவர் வழங்குகிறார். முதல் உரிமை கடமை. அதாவது தன்னை நம்பி வாழும் மக்களுக்குத் தொண்டு செய்தல்; அவர்களைக் காத்தல்; அவர்களுக்கு எந்த வகையான தீங்கும் வராமல் பேணிப் பாதுகாத்தல். இவை அரசின் முதற்கடமை. இந்த முதற்கடமையைச் செய்யத் தடையாக இருப்பவரை, இல்லை-தடையாக இருப்பவரின் குற்றத்தைக் கடிந்து நீக்கத் தண்டனை வழங்கும் உரிமை இரண்டாவது. முதலுரிமைக் கடமையாகிய தொண்டினைச் செய்யத் துணைக் கருவியாகவே தண்டம் வழங்கும் உரிமை அரசுக்குக் கிடைத்தது; அதிகாரமும் கிடைத்தது என்பது வள்ளுவரின் கருத்து. ஆனால், இன்று அரசு என்றவுடன் மக்கள் மன்றத்தில் நினைவுக்கு வருவது. தொண்டு அல்ல - சேவையல்ல; அதிகாரம்! அதன் வழிப்பட்ட அச்சம்! இது திருவள்ளுவர் நெறிக்கு முரண். திருவள்ளுவர்,

‘குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.’

549

என்பர். வேந்தன், குற்றங் கடிதல் வடுவன்று. அஃது அவன் தொழில்! எப்பொழுது? குடிபுறம் காத்தோம்பும் தொழிலைச் செய்யும் பொழுது வடுவன்று. இவ்வாறு கொண்டு கூட்டிப் பொருள்கொண்டாலே திருவள்ளுவர் காட்டும் அரசியலின் மாட்சிமையை உணர முடியும்.

வேந்தன் தண்டனை வழங்கலாம். ஆம்! வேளாண்மை செய்பவன் களைப்பிடுங்குதலைப் போல, மன்பதை காக்கும் அரசுக்கும் மக்களே போல வாழும் கயவரை ஒறுக்க உரிமையுண்டு. ஆனால், இங்கே ஒறுத்திடும் அதிகாரம் ஒறுக்கப்படும்