பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்களின் இழிநிலையைப் பொறுத்ததேயாம். கொலை, உலகில் கொடுமையானது. கொலையினும் கொடியர் என்று வள்ளுவர் வலியுறுத்த "கொலையிற் கொடியாரை" என்பார். கழனியில் உள்ள களையைக் கிள்ளுதல் கூடாது. கிள்ளினால் மீண்டும் தளிர்க்கும். கழனியிற் களைபறிப்போர் களையை வேரோடு அகற்றுதல் வேண்டும். களையல்லாமல் வளரும் பயிருக்கு உரச்சத்தைச் சேர்க்கும் செடியைப் பிடுங்கக் கூடாது. மக்களின் சாதாரணக் குற்றங்களைச் செய்கின்றவர்கள் சிறிய தண்டனைகள் மூலம் திருத்தமுறுவர். இத்தகை யோருக்குக் கடுந்தண்டனை வழங்குதல் முறையன்று, கொலையிற் கொடியாருக்குத்தான் வேளாளன் களையைப் பிடுங்கி எறிதலைப் போல, அரசு கடுந் தண்டனை வழங்கவேண்டும்.

திருவள்ளுவர்,

‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்’

550

என்பர். ரூசோவும் கொலையிற் கொடியாருக்குக் கொலைத் தண்டனை வழங்காவிடில் கொலை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்றும், கொலை செய்வார் பலராகப் பெருகுவர் என்றும் கூறுவர். மேலும், கொலைஞன் ஒருவனுக்குக் கொலைத் தண்டனை வழங்குவதன் மூலம், பிறிதொரு மனிதனைக் கொலையினின்று தடுப்பது மட்டுமன்றி இன்னொரு மனிதனைக் கொலைகாரனாக மாறாமலும் தடுக்க முடியும் என்பர்.

அரசுக் கட்டிலில் ஏறுவோர் மற்றவர் செய்யும் விமர்சனத்துக்குக் கூச்சப்படக் கூடாது; உழப்படாத நிலமும், துடைக்கப்படாத வைரமும் விமர்சனம் செய்யப்படாத அரசும் காலப்போக்கில் தாமே வளஞ் சுருங்கும்; ஒளி குன்றும்; தரங் குன்றும். அரசுக்கட்டிலில் இருப்போர் தம்மை மற்றவர் புகழ்ந்தால் எங்ஙனம் மகிழ்கிறார்களோ அது