பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



5. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவற்றை வாயிலாகக் கொண்டே மனத்துரய்மை கெடுகிறது; அறம் கெடுகிறது. இவை வளர்ச்சியடையாதவர்களை இழுத்து எறியும் ஆற்றலுடையன. இவற்றின் இழுப்பில் செல்லாது அறநெறி பேணுதல் கடமை. தாம் எளிமையாக வாழ்தல், மற்றவர்களுக்கு வெகுளி உண்டாகும்படி நடவாதிருத்தல், மேற்கொண்டு அறவாழ்க்கையை உறுதி செய்க.

6. மனத் தூய்மையாகிய அறநெறி பேணுதல் ஒவ்வொரு நொடியிலும் செய்யத்தக்கது. இதற்குக் காலக்கெடு வைக்க வேண்டாம்.

7. மனத் தூய்மையைத் தரத்தக்க - பேணத்தக்க அறச் செயல்களை இயன்றவாறெல்லாம் வாயில்களை வலிய அமைத்துக்கொண்டு செய்க. அங்ஙனம் செய்யும் அறச்செயல்களை வாழ்க்கையில் துறை தோறும் மேற்கொள்க. அறம் என்றும்-எப்போதும் பயன்படும்.

8. மனத்தூய்மை கெடாதிருக்கத் துன்புறுவார் துன்பம் அறத்தின் வழியது என்று நினைத்துத் துன்பம் துடைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

9. வாழ்க்கையின் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ளும்போது அம்முயற்சிகளை, மனத்தூய்மை கெடாதவாறும், மற்றவர் வாழ்க்கைக்குத் துன்பம் செய்யாதவாறும், நன்மையாக அமையுமாறும் பார்த்துக் கொண்டால் அறவாழ்க்கை எளிது.

10. உயிர் நலத்திற்கு அறமே துணை செய்யும். அறமே இப்பிறப்பு வாழ்க்கைக்குரிய செல்வத்தையும், வீடு பேற்றினையும் தரும்.

(அறவழி வந்த பொருள் வீட்டின்பத்துக்கும் துணை செய்யும்).