பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்



337


எல்லாம் காண்பர். ஏன் அக் கண்களுக்கே கூட காட்சியைப் படைத்தும் கொடுப்பர்.

கண்ணால் காணப்பெறும் காட்சியிலிருந்து வளர்வது அறிவுக் காட்சி! எந்த ஒன்றையும் அதன் இருப்பையும் உள்ளீட்டையும் பண்பாடுகளையும் அறிவுப் பார்வையில் அணுகுவது அறிவுக் காட்சி. சில சமயங்களில் அறிவுக் காட்சி அப்பட்டமான உண்மைகளைக் கூறும். அது கணிதத்தைப் போல் சுவையற்றதாக இருக்கும்.

அறிவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு வளர்ச்சி அடையும் நிலையில் நெஞ்சம் கலந்த அனுபவங்கள் கிடைக்கும்; உணர்வு சிறக்கும்; புலன்கள் செப்பமடையும்; பொறிகள் செழிக்கும்; புண்ணியத்தின் பயனையடையும். இங்ஙனம் உணர்வுக் காட்சியில் வளர்ந்தவர்கள் நன்னிலையையே காண்பர். நன்மையையே சொல்லுவர்; நன்மையையே செய்வர்!

உணர்வுக் காட்சியிலும் சிறந்தது கடவுட் காட்சி! ஏன்? உணர்வுக் காட்சிகளில் கூட ஒரோவழி உயிர்க்குல வேறு பாடுகள் தலைக்காட்டலாம். சுற்றம், உறவு என்ற வட்டங்கள் தோன்றலாம். இந்த உணர்வுகள் குறை உடைய - அல்லாது போனாலும் வளர்ந்த-முழுமையான நிறையாகாது. கடவுட் காட்சியில்தான் எல்லைகள் கரைகின்றன. வேறுபாடுகள் தலைகாட்டுவதில்லை. எங்கும் எல்லாவற்றிலும் ஒருமைப்பாட்டினைக் காட்டும் காட்சி கடவுள் காட்சி!

திருவள்ளுவர், ஞானப் புதல்வர்! திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. திருவள்ளுவர் கடவுள் காட்சியில் திளைத்த பேரருளாளர்; பெருஞானச் செல்வர். திருவள்ளுவர் தாம் கண்ட கடவுட் காட்சியைக் காணாத மக்களுக்கு, ஞானாசிரியராக அமர்ந்து விளக்குகிறார்.

எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என நான்குவகை. இந் நான்கு

தி.IV.22.